நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோருதல்-உள்துறை அமைச்சர் அமித்ஷா சாதகமான பதில்.

by Writer / 18-01-2022 12:41:41pm
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோருதல்-உள்துறை அமைச்சர் அமித்ஷா சாதகமான பதில்.

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பது தொடர்பான மனு மீதான நடவடிக்கை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் சாதகமான பதிலை அளித்ததாக திமுக எம்பியும் தமிழக பிரதிநிதிகள் குழுவின் தலைவருமான டிஆர். பாலு தெரிவித்துள்ளார்.

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பது தொடர்பாக தமிழக அரசியல் கட்சி பிரதிநிதிகள் திமுக எம்பி டி.ஆர். பாலு தலைமையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க கோரிக்கை மனு அளித்தனர்.

இந்த நிலையில் தமிழக குழுவிற்கு இரு முறை நேரமளித்தும் அவர்களை அமித்ஷாவால் சந்திக்க இயலவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் நேற்றைய தினம் டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார்கள்.

இதுகுறித்து திமுக எம்பி டி.ஆர்.பாலு செய்தியாளர்களிடம் கூறுகையில் மழை பாதித்த பகுதிகளில் மத்திய அரசு நிவாரணத்தை விரைந்து வழங்கிய கோரிக்கை விடுத்தோம். அதற்கு அமித்ஷா ஜனவரி 31 ஆம் தேதிக்குள் நிவாரண நிதியை ஒதுக்குகிறோம் என அவர் தெரிவித்ததாக டிஆர் பாலு தெரிவித்தார்.

ஏற்கெனவே இரு முறை அமித்ஷாவை பார்க்க முயற்சித்தும் அது நடக்காமல் போனதற்கு அமித்ஷா ஏதேனும் மன்னிப்பு கேட்டாரா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு டிஆர் பாலு கூறுகையில் தன்னால் தமிழக குழுவை சந்திக்க முடியாமல் போனதற்கு காரணம் அதிக பணி பளு இருந்ததால்தான். இதை ஊடகங்கள் பெரிதுப்படுத்திவிட்டன என அமித்ஷா என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்தார்.

தமிழக குழுவினரை மத்திய அமைச்சர் அமித்ஷா சந்திக்க மறுப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது என முதல்வர் ஸ்டாலின் கண்டனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் டிஆர் பாலு பேசுகையில் நீட் தேர்வு விலக்கு உடனடியாக செய்யப்பட வேண்டும் என கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

அப்போது அமித்ஷா, இந்த பிரச்சினை குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர், மத்திய கல்வித் துறை அமைச்சர் ஆகியோருடன் கலந்து பேசி நல்லதொரு முடிவை தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் தெரிவிப்பேன் என மத்திய அமைச்சர் அமித்ஷா சொல்லியிருக்கிறார் என்றார் டிஆர் பாலு. இந்த கூட்டத்தில் திமுக மக்களவைக் குழு தலைவர் டி.ஆர்.பாலு அதிமுக எம்.பி நவநீதகிருஷ்ணன், விசிக எம்.பி. ரவிக்குமார், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் இருந்தனர்.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோருதல்-உள்துறை அமைச்சர் அமித்ஷா சாதகமான பதில்.
 

Tags :

Share via