கோரிக்கையை முதல்வர் பரிசீலிப்பதாக கூறியுள்ளார்.- கூறியுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கோரிக்கையை முதல்வர் பரிசீலிப்பதாக தெரிவித்ததாக திருமாவளவன் கூறினார்.
தமிழக முதல்வரை சந்தித்த பின்பு செய்தியாளர்களிடம் விளக்கிய திருமாவளவன், அண்மையில் சேலம் மாவட்டம் காடயம்பட்டி ஒன்றியம் மோரூர் கிராமத்தில் நடந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியேற்ற தடைவிதித்து நடந்த வன்முறை தொடர்பாக மாண்புமிகு முதல்வர் அவர்களை நேரில் சந்தித்து அது குறித்த விவரங்களை பகிர்ந்து கொண்டோம். பல கட்சிகளின் கொடிகள் பறக்கின்ற இடத்தில் விடுதலை சிறுத்தைகளின் கொடியை பறக்க ஏன் அனுமதிக்கவில்லை என்று அந்த கிராமத்து மக்கள் ஆத்திரமடைந்து நாங்கள் கொடியேற்றிய தீருவோம் என்று கொடிக் கம்பத்தை எடுத்துச் சென்றபோது ஒருபுறம் சாதியவாத சக்திகளும், இன்னொருபுறம் காவல்துறையும் அந்த கிராமத்தை சேர்ந்த தலித் மக்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்டனர்.
அதை கண்டித்து சென்னையிலும், சேலத்திலும், மதுரையிலும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று அறிவித்து இருந்தோம். அதன்படி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதுகுறித்து மாண்புமிகு முதல்வர் அவர்கள் பேச விரும்பியதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சேலத்திலும், மதுரையிலும் நடத்துவதாக இருந்த போராட்டத்தை தள்ளி வைத்தோம். அதனைத்தொடர்ந்து முதல்வர் அவர்களை நேரில் சந்தித்து இந்த விவரங்களை எடுத்துச் சொன்னோம். மிகுந்த கவனத்தோடு கனிவோடு அதை கேட்டுக்கொண்டார். அதுகுறித்து பரிசீலிப்பதாக முதல்வர் கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும் சாதியவாத சக்திகளிடம் இருந்து எதிர்ப்பு இருக்கிறதோ இல்லையோ ஒரு சில காவல்துறை அதிகாரிகள் குறிப்பிட்ட சில இடங்களில் இதுபோன்ற தடை விதிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது சட்ட ஒழுங்கு பிரச்சனையாக மாறுகிறது. மோரூரை பொறுத்தவரையில் காவல்துறையினர் சொன்னது போல் பாட்டாளி மக்கள் கட்சி தரப்பிலிருந்து முதலில் எந்த எதிர்ப்பும் வரவில்லை. அந்த கிராமத்தை சேர்ந்த தலித் அல்லாத மக்களின் தரப்பிலிருந்தும் எதிர்ப்பு இல்லை. இன்னும் சொல்லப்போனால் அந்த இடம் 1940இல் ஒரு தலித் சமூகத்தைச் சார்ந்த பஞ்சாயத்து தலைவர் அரசாங்கத்திற்காக வழங்கிய இடம்.
அந்த இடத்தில்தான் இப்போது பஞ்சாயத்து ஒன்றிய அலுவலகம் இயங்குகிறது. பேருந்து நிறுத்தமும் அந்த இடத்தில்தான் இருக்கிறது. அது ஒரு தலித் நிலம் என்பது இப்போது தெரியவருகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடி, பாட்டாளி மக்கள் கட்சியின் கொடி, தே.மு.தி.கவின் கொடி, பாட்டாளி மக்கள் கட்சி கொடியின் கம்பத்திலே வன்னியர் சங்க கொடி, விஜய் ரசிகர் மன்றத்தின் பெயர் பலகை உள்ள அந்த இடத்தில் தான் விடுதலைச் சிறுத்தைகளும் கொடியேற்ற முயற்சி செய்தார்கள்.
யாரும் எதிர்ப்பு தெரிவிக்காமலே காவல்துறை அனுமதி மறுத்ததால் எங்களுக்கு மட்டும் ஏன் அனுமதி மறுக்கிறீர்கள் என்று கேட்டபோது, எல்லாக் கொடிகளையும் நாங்கள் அப்புறப்படுத்த போகிறோம் என்று காவல்துறை சொல்லி இருக்கிறார்கள். எப்போது நீங்கள் அப்புறப்படுத்த போகிறீர்களோ அப்போது எங்கள் கொடியையும் அப்புறப்படுத்துங்கள் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தான் பிரச்சனை பெரியதாகியது என திருமாவளவன் தெரிவித்தார்.
Tags :