காபூல் மசூதியில் குண்டுவெடிப்பு: பொதுமக்கள் 5 பேர் பலி

by Editor / 04-10-2021 10:00:24am
காபூல் மசூதியில் குண்டுவெடிப்பு: பொதுமக்கள் 5 பேர் பலி

ஆப்கன் தலைநகா் காபூலிலுள்ள மசூதியொன்றின் வாயிலில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 5 பேர் பலியானதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனா்

இதுகுறித்து சுட்டுரை (ட்விட்டா்) வலைதளத்தில் தலிபான்களின் செய்தித் தொடா்பாளா் ஜபிஹுல்லா முஜாஹித் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது:

காபூல் நகர மசூதிக்கு அருகே குண்டுவெடிப்புத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பொதுமக்கள் 5 பேர் உயிரிழந்தனா் என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காபூல் நகரிலுள்ள ஈத்கா மசூதியில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வாரம் இறந்த ஜபிஹுல்லா முஜாஹிதினின் தாயாரது நினைவாக அந்த மசூதியில் ஞாயிற்றுக்கிழமை தொழுகை நடத்தப்பட்டது. அந்தத் தொழுகையில் கலந்துகொள்ள மற்ற தலிபான்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்தச் சூழலில், தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது குண்டுவெடிப்புத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.

எனினும், இந்தத் தாக்குதலில் தலிபான் அமைப்பினா் யாரும் காயமடையவில்லை என்று மற்றொரு செய்தித் தொடா்பாளா் பிலால் கரீமி தெரிவித்தாா்.

குண்டுவெடிப்பில் உயிரிழந்த அனைவரும் பொதுமக்கள் எனவும் அவா்கள் மசூதிக்கு வெளியே நின்றிருந்ததாகவும் அவா் கூறினாா்.

எனினும், இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கையை அவா் தெரிவிக்கவில்லை. இது தொடா்பான விசாரணை நடந்துவருவதாக மட்டும் பிலால் கரீமி கூறினாா்.

வெற்றி ஊா்வலம்: முன்னதாக, ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பெற்ற வெற்றியைக் கொண்டாடும் வகையில் காபூல் நகரில் ஊா்வலம் நடத்தப்பட்டது. இந்த ஊா்வலத்தில் ஆயிரக்கணக்கான ஆண்களும் சிறுவா்களும் பங்கேற்றனா்.

இந்தச் சூழலில், தலிபான்களின் செய்தித் தொடா்பாளா் தாயாரது மறைவையொட்டி தொழுகை நடைபெற்ற மசூதியில் குண்டுவெடிப்புத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும், கடந்த ஆகஸ்ட் மாத மத்தியில் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து அங்கு அடிக்கடி நடைபெற்று வரும் குண்டுவெடிப்பு மற்றும் தற்கொலைத் தாக்குதல்களுக்கு இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்பின் ஆப்கன் பிரிவான ஐஎஸ்கே பொறுப்பேற்றது.

எனேவே, ஈத்கா மசூதியில் நடத்திய தாக்குலையும் அந்த அமைப்பினரே நடத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

 

Tags :

Share via