மத்திய - மாநில அரசுகள் எடுத்து வரும்  நடவடிக்கைகள் திருப்தி அளிக்கிறது   உயர் நீதிமன்றம் கருத்து 

by Editor / 31-05-2021 07:32:22pm
மத்திய - மாநில அரசுகள் எடுத்து வரும்  நடவடிக்கைகள் திருப்தி அளிக்கிறது   உயர் நீதிமன்றம் கருத்து 


 

கொரோனா தொடர்பாக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில், தமிழக மருத்துவ மற்றும் குடும்ப நலத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிக்கை தாக்கல் செய்தார்.இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வில்  விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தில் உள்ள முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கும் சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொரோனா தொடர்பான புள்ளிவிவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும். கொரோனா நிவாரண உதவிகள் வழங்கச் செல்லும் அமைச்சர்கள், எம்எல்ஏக்களுடன் ஏராளமான தொண்டர்கள், தடுப்பு விதிகளைப் பின்பற்றாமல் செல்வதாகவும் வழக்கறிஞர்கள் குறை கூறினர்.
இதைக் கேட்ட நீதிபதிகள், கொரோனா இரண்டாவது அலை தணிந்து வருவதாகவும், மத்திய - மாநில அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைகள் திருப்தியளிப்பதாகவும் தெரிவித்தனர்.
இந்த ஆண்டு இறுதிக்குள் 216 கோடி தடுப்பூசி டோஸ்கள் உற்பத்தி செய்யப்படும் என்ற இலக்கை விரைந்து எட்ட வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், கரோனா தொற்று எண்ணிக்கை, பலி எண்ணிக்கை விவரங்களைத் தெரிவிப்பது அவமானமல்ல எனவும், அந்த விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.

பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டியதாகக் குற்றச்சாட்டும் இல்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். பின்னர், வழக்கு விசாரணையை ஜூன் 7-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

 

Tags :

Share via