தூத்துக்குடியில் ரூ. 1500 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல்

by Editor / 21-04-2021 08:52:41pm
தூத்துக்குடியில் ரூ. 1500 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல்


தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் வழியாக போதைப்பொருள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், தூத்துக்குடிக்கு வரும் சரக்கு பெட்டகங்களை தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில் பிரேசில் நாட்டில் இருந்து தூத்துக்குடியைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு மரக்கட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டன. அந்த மரக்கட்டைகள் சரக்கு பெட்டகங்களில் அடைக்கப்பட்டு பனாமா நாட்டுக்கு கொண்டு செல்லப்பட இருந்தது. அங்கு இருந்து மரக்கட்டைகள் வைக்கப்பட்ட 8 கன்டெய்னர்கள் கப்பல் மூலம் இலங்கை வழியாக தூத்துக்குடிக்கு நேற்று அதிகாலையில் வந்தன.
தூத்துக்குடிக்கு வந்த அக்கப்பலில் 24 மாலுமிகள் இருந்தனர். கப்பலில் சந்தேகப்படும்படியாக இருந்த 6 கன்டெய்னர்களை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் கார்த்திகேயன் தலைமையிலான அதிகாரிகள் சோதனையில் மறித்து சோதனை நடத்தினர். அதில் ஒரு கன்டெய்னரில் மரத்தடிகளுக்கு இடையே கருப்பு நிற சிறிய பைகளாக மொத்தம் 28 பைகள் இருந்துள்ளது. அந்த பைகளை பறிமுதல் செய்து அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் கொக்கைன் உள்ளிட்ட சுமார் 300 கிலோ எடை கொண்ட போதைப்பொருட்கள் கடத்தி வரப்பட்டிருப்பது தெரியவந்தது.
அனைத்துலக சந்தையில் இப்போதைப்பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.1,500 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர்.
 

 

Tags :

Share via