நிர்வாகிகளுக்கு, கனிமொழி எம்.பி. வேண்டுகோள் இளம்பெண்களை சேர்க்க வேண்டும்

by Admin / 27-12-2021 12:11:14pm
நிர்வாகிகளுக்கு, கனிமொழி எம்.பி. வேண்டுகோள்  இளம்பெண்களை சேர்க்க வேண்டும்

கொள்கை உறுதிகொண்ட இளைஞர்களாலும், எழுச்சிமிக்க பெண்களாலும் கட்டமைக்கப்பட்ட பேரியக்கம் தி.மு.க. நமது கட்சியின் அடித்தளமாக விளங்கும் இளைஞர்கள் பலரை நம் கொள்கைகள் சென்றடையவும், நமது கட்சியில் அவர்களை உறுப்பினர்களாக இணைக்கவும் நம் கட்சி தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க. ஸ்டாலின் கடந்த 18-ந்தேதி நடந்த கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அறிவுறுத்தினார்.
 
தமிழகத்தின் மக்கள் தொகையில் சரிசமமான பங்குடையவர்கள் பெண்கள். அதிலும் நாளைய சமுதாயத்தின் சிந்தனையை வடிவமைக்கும் திறன் பெற்றவர்கள் இன்றிருக்கும் 18 முதல் 30 வயதுடைய இளம் பெண்கள். நமது கட்சியின் எதிர்காலத்தை உருவாக்குவதில் இந்த இளம் பெண்களின் பங்கு இன்றியமையாதது.

தி.மு.க.வின் மையக் கோட்பாடாக விளங்கும் சமூக நீதி சிந்தனையின் வெளிப்பாடே அரசியலில் பெண்கள் தனக்கென உரிமைகளை உருவாக்குவது. நமது கட்சியின் மகளிரணி அடுத்த தலைமுறைக்கான சுயசிந்தனை உடைய, உரிமைகளை உணர்ந்த இளம் பெண்களை உருவாக்க வேண்டும். அந்த விதத்தில் இன்றிருக்கும் 18 முதல் 30 வயதுக்குள்ளான இளம் பெண்களை நமது கட்சியில் ‘மகளிரணி உறுப்பினர்களாக' இணைத்து அவர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது.

அரசியலில் ஆர்வம் காட்ட துடிக்கும் இளம் பெண்களுக்கு வாய்ப்புகள் அளிப்பதைத் தாண்டி, நாம் 18 முதல் 30 வயதுக்குள் உள்ள இளம்பெண்களை மகளிரணி உறுப்பினர்களாக இணைத்து அவர்களுக்கு அரசியலின் மேல் ஈடுபாடு ஏற்பட வழிசெய்து நமது கட்சியின் எதிர்காலத்துக்கான அடித்தளம் வலுவாக உள்ளதை உறுதி செய்வோம்.

இந்த முக்கியமான முயற்சியை நீங்கள் அனைவரும் இன்றே தொடங்கி, இதில் ஏற்படும் முன்னேற்றங்கள் மற்றும் அது சம்பந்தமான தகவல்களை அணித் தலைமையுடன் தினந்தோறும் பகிருமாறு கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


 

 

Tags :

Share via