ரஷிய படை அணிவகுப்பு தாக்குதலை தீவிரப்படுத்த திட்டம்

by Admin / 01-03-2022 02:29:29pm
 ரஷிய படை அணிவகுப்பு தாக்குதலை தீவிரப்படுத்த திட்டம்

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா இன்று 6-வது நாளாக தாக்குதலை தொடர்ந்து வருகிறது. உக்ரைனை சுற்றி வளைக்கும் எண்ணத்தில் அனைத்து திசைகளில் இருந்தும் படைகள் முன்னேறி வருகின்றன.

ரஷிய எல்லை, கிழக்கு உக்ரைனில் உள்ள ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர் பகுதி, பெலாரஸ் நாடு, கிரீமியா தீபகற்பம் ஆகிய பகுதிகளில் இருந்து ரஷிய படைகள் உக்ரைனுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
 
இதில் தலைநகர் கீவ் மற்றும் 2-வது பெரிய நகரமான கார்கீவ் ஆகியவற்றில் கடும் தாக்குதல்களை தொடுத்தது. அங்கு ஏவுகணை மற்றும் குண்டு மழைகள் பொழிந்தன. குறிப்பாக தலைநகர் கீவ்வை கைப்பற்றும் முயற்சியில் ரஷிய படைகள் தீவிரமாக உள்ளனர்.

அந்நகருக்குள் நுழைந்துள்ள ரஷிய படை தெருக்களில் சண்டையிட்டது. அவர்களுக்கு எதிராக உக்ரைன் ராணுவத்தினரும் கடுமையாக போராடி வருகிறார்கள்.

இந்த நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ்வுக்கு வடக்கே ரஷிய படைகள் வரும் செயற்கைகோள் படம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 64 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரஷிய ராணுவத்தின் அணி வகுப்பு உள்ளது.

ராணுவ வாகனங்கள், பீரங்கிகள், தளவாடங்கள் ஆகியவற்றுடன் ரஷிய வீரர்கள் 64 கிலோ மீட்டருக்கு அணிவகுத்து தலைநகரை நோக்கி செல்கிறார்கள். அவர்கள் செல்லும் வழியில் சில வீடுகள், கட்டிடங்கள் எரிந்து கொண்டிருப்பதை காண முடிகிறது.

ஏற்கனவே நேற்று கீவ் நகர் மையப்பகுதியில் இருந்து ரஷிய படைகள் 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

கீவ்வை நோக்கி பெரும் ஆயுதங்களுடன் ரஷியபடை முன்னேறி வருவதால் அங்கு பெரிய அளவில் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதா? என்ற சந்தேகம் ஏற்பட்டு இருக்கிறது.

நேற்று உக்ரைன் - ரஷியா இடையே பெலாரஸ் நாட்டில் பேச்சுவார்த்தை தொடங்கியதை அடுத்து ரஷியாவின் தாக்குதல் தீவிரம் குறைந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தான் தலைநகர் கீவ்வை நோக்கி வடக்கு பகுதியில் இருந்து ரஷிய படைகள் வந்து கொண்டிருக்கிறது.

உக்ரைனின் 2-வது பெரிய நகரமான கார்கீவ் நகரிலும் கடும் சண்டை நடந்து வருகிறது. அந்நகரை கைப்பற்றியதாக ரஷிய ராணுவம் அறிவித்த நிலையில் அதனை மீண்டும் மீட்டதாக உக்ரைன் அறிவித்தது.

அந்நகரை கைப்பற்றி ரஷிய ராணுவம் தொடர்ந்து சண்டையில் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே கார்கீவ் நகரில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் ரஷிய ராணுவம் தாக்குதல் நடத்தியது. அங்கு குண்டுகள் வீசப்பட்டதில் 11 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via