டைகர் மோப்ப நாய்  உதவியுடன்  ஆட்கொல்லி புலியின் கால்தடம் கண்டுபிடிப்பு : 

by Editor / 04-10-2021 06:22:19pm
டைகர் மோப்ப நாய்  உதவியுடன்  ஆட்கொல்லி புலியின் கால்தடம் கண்டுபிடிப்பு : 

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் மசினக்குடியில் சுற்றித்திரிந்த ஆட்கொல்லி புலியின் கால்தடத்தை சத்தியமங்கலம் முதுமலை காப்பக டைகர் என்னும் மோப்ப நாய் கண்டுப்பிடித்ததைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறை மசினகுடி - சிங்காரா வனப் பகுதியில் மரங்களில் ஏறி தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மசினகுடி - சிங்காரா வனப்பகுதி சாலைபில் புலி நடமாட்டம் தென்ப்பட்டதை தொடர்ந்து சிங்காரா சாலையில் வேட்டை தடுப்பு பிரிவினர் 10க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்களில் ஏறி அமர்ந்து புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். புலி நடமாட்டம் தெரிந்தால் வனத்துறை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.


 நீலகிரி மாவட்டம் மசினகுடி மற்றும் சிங்காரா வனப்பகுதியில் சுற்றி திரியும் ஆட்கொல்லி புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க இரண்டு கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர் காட்டுக்குள் சென்றனர். அந்தப் புலியை  பிடித்துவிடுவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கூடலூர் மற்றும் மசினக்குடி பகுதிகளில் சுற்றித் திரிந்த ஆட்கொல்லி புலி, இதுவரை நான்கு பேரை கொன்றுள்ளது. புலியை பிடிக்க தொடர்ந்து பத்தாவது நாளாக வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மசினக்குடி வனப்பகுதியில் சுற்றித்திரிந்த புலி, சிங்காரா வனப்பகுதியில் இடம் பெயர்ந்ததாக தகவல் வெளியானது.

உள்ளூர் வாகன ஓட்டுநர், அந்த புலியை சிங்காரா மின்நிலையம் அருகே பார்த்ததாக கூறினார். அவர் அளித்த அடையாளங்கள் மூலம், அது ஆட்கொல்லி புலிதான் என்று முடிவு செய்த வனத்துறையினர் சிங்காரா பகுதிக்கு விரைந்தனர். மிகவும் சோர்வுடன் புலி இருந்ததாக ஓட்டுநர் கூறிய நிலையில், அதனை பிடிக்க வனத்துறையினர் தீவிர முனைப்பு காட்டி வருகின்றனர்.


இதனிடையே புலி இருக்கும் இடத்தை அறிய சத்திய மங்கலம் புலிகள் காப்பகத்திலிருந்து டைகர் எனும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. ஏற்கனவே அதவை மற்றும் ராணா ஆகிய மோப்பநாய்கள் வரவழைக்கப்பட்ட நிலையில், டைகரும் பணியில் இறக்கப்பட்டது. மோப்பநாய் டைகர் புலியின் கால் தடத்தை கண்டுபிடித்துள்ளது

 

Tags :

Share via