அடிமாலி அருகே முன் விரோதத்தில் சிறுவனை சுத்தியலால் அடித்துக் கொன்ற வாலிபர்

by Admin / 04-10-2021 11:53:33pm
அடிமாலி அருகே முன் விரோதத்தில் சிறுவனை சுத்தியலால் அடித்துக் கொன்ற வாலிபர்

அடிமாலி அருகே முன் விரோதத்தில் சிறுவனை அடித்துக்கொன்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

இடுக்கி மாவட்டம் அடிமாலியை அடுத்துள்ள ஆமை கண்டம் பகுதியைச் சேர்ந்தவர் ரியாஸ். விவசாயி. இவரது மனைவி அஸ்மி (வயது 34). இவர்களது மகன் அல்டாப் (6), முதலாம் வகுப்பு படித்து வந்தான். ரியாசுக்கும் அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஷாஜகான் (40) என்பவருக்கும் இடையே நிலப்பிரச்சனை தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது.

 இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று ரியாஸ் பணி நிமித்தமாக வெளியே சென்று விட்டார். அப்போது ரியாஸ் வீட்டுக்குள் ஷாஜகான் புகுந்தார். அவரது மனைவி அஸ்மி, தாயார் சைனம்மாள் (62) ஆகியோரிடம் தகராறு செய்தார்.

பின்னர் அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரமடைந்த ஷாஜகான் தன் கையில் வைத்திருந்த சுத்தியலால் அஸ்மி, சைனம்மாள் ஆகியோரை தாக்கினார். தனது தாயார் தாக்கப்படுவதை பார்த்து குழந்தை அல்டாப் அழுதபடி அவரிடம் வந்தார். ஆனால் சிறுவன் என்றும் பார்க்காமல் அல்டாப்பையும் சுத்தியலால் ஷாஜகான் தாக்கினார்.

இவர்கள் வீட்டில் நடந்த தகராறை பார்த்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதை பார்த்ததும் ஷாஜகான் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். பின்னர் ரத்த வெள்ளத்தில் காயமடைந்து கிடந்த 3 பேரையும் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதில் அல்டாப் பரிதாபமாக உயிரிழந்தான். படுகாயமடைந்த அஸ்மி மற்றும் சைனம்மாள் மேல் சிகிச்சைக்காக கோட்டயம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து வெள்ளைத்தூவல் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய ஷாஜகானை தேடி வருகின்றனர். நிலப்பிரச்சனையில் சிறுவன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

 

Tags :

Share via