நெல்லை அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி
நெல்லை அருகே இன்று காலை கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லையை அடுத்த மேலத்தாழையூத்து பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் சக்தி (வயது 10). அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.
அதே பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மகன் கார்த்திக் என்ற தங்கபிரபு (13) 8-ம் வகுப்பு படித்து வந்தான்.
நண்பர்களான சக்தி, கார்த்திக் ஆகிய இருவரும் இன்று காலை அங்கு கல்வெட்டான்குழி பகுதியில் உள்ள கல்குவாரி ஒன்றில் குளிக்க சென்றனர்.
தனியார் ஒருவருக்கு சொந்தமான இந்த குவாரி தற்போது செயல்படாமல் உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக இங்கு அதிகளவு தண்ணீர் தேங்கி இருந்தது.
மேலும் ஊற்று காரணமாகவும் தண்ணீர் குட்டை போல் தேங்கி கிடந்தது. இதில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் துணிகள் துவைத்தும், குளித்தும் வந்துள்ளனர்.
இன்று காலை சக்தி, கார்த்திக் ஆகியோர் குவாரிக்கு குளிக்க சென்ற போது ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனை அங்கு துணி துவைத்து கொண்டிருந்த பெண் ஒருவர் பார்த்து இருவரையும் ஆழமான பகுதிக்கு செல்லாதீர்கள் என கூறியுள்ளார். ஆனால் சக்தி, கார்த்திக் இருவரும் ஆழமான பகுதியில் குதித்து குளித்துள்ளனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக இருவரும் நீரில் மூழ்கினர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பெண் கத்தி கூச்சலிட்டார். உடனே அங்கு திரளானோர் ஓடி சென்றனர். அவர்கள் நீரில் மூழ்கிய சிறுவர்களை மீட்டனர். அதற்குள் இருவரும் பரிதாபமாக இறந்தனர்.
குளிக்க சென்ற சிறுவர்கள் பலியான தகவல் அறிந்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் அங்கு திரண்டனர்.
மேலும் பலியான சிறுவர்களின் பெற்றோர், உறவினர்கள் அங்கு திரண்டனர். அவர்கள் சிறுவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுதனர்.
இதுகுறித்து தாழையூத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :