நீலகிரியில் உலவும் ‘‘புலியைக் கொல்ல வேண்டாம்’’: வனத்துறைக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்
நீலகிரியில் உலவும் புலியை கொல்ல வேண்டாம் என வனத்துறையை சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம், கூடலூரில் தேவன் தனியார் எஸ்டேட் பகுதியை சேர்ந்த 51 வயதான சந்திரன் என்பவரை கொன்ற புலியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். புலியை வேட்டையாடி பிடிக்க தலைமை முதன்மை வன உயிரின பாதுகாவலர் உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து நொய்டாவைச் சேர்ந்த சங்கீதா தோக்ரா என்பவரும், இந்திய கால்நடைகளுக்கான மக்கள் அமைப்பும் அவசர வழக்கு தொடர்ந்தனர். குறிப்பிட்ட அந்த புலி ஆட்கொல்லி என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட வில்லை எனவும், புலியை வேட்டையாடுவது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கும் முன் உரிய சட்டவிதிகளை பின்பற்றவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில் எம்.டி.டி. 23 புலியை ஆட்கொல்லி புலியாக கருதி அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அப்பகுதியில் 144 தடை உத்தரவை பிறப்பித்துவிட்டு, பின்னர் புலியை பிடிப்பதற்கான நடவடிக்கைகளை தொடர வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.
வனத்துறை தரப்பில் அரசு பிளீடர் பி.முத்துக்குமார் ஆஜராகி, புலியை கொல்லும் திட்டம் இல்லை என்றும், அதை உயிருடன் பிடிக்கவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்தார். அதன் கழுத்தில் ஏற்கனவே காயம் உள்ளது தெரிய வந்துள்ளதாகவும் தெரிவித்தார். இதை பதிவு செய்த நீதிபதிகள், அந்த புலி ஆட்கொல்லி புலியாக இல்லாமல் கூட இருக்கலாம் என்பதால், அதை உடனடியாக கொல்ல முயற்சிக்க வேண்டாம் என அறிவுறுத்தினர்.
புலியின் நடவடிக்கை கண்காணித்து, அதை பிடித்த பிறகு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அதை பிடிக்கும்போது மற்ற விலங்குகளுக்கு எந்த இடையூறும் ஏற்படுத்த கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளனர். புலியை பிடிக்கும் நடவடிக்கை தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
Tags :














.jpg)




