ரயிலில் தவறவிட்ட 3 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள 7 பவுன் தங்க நகை மீட்பு.

by Editor / 12-09-2023 10:41:41pm
ரயிலில் தவறவிட்ட 3 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள 7 பவுன் தங்க நகை மீட்பு.

தென்காசி அருகே கீழப்புலியூரை சேர்ந்த பெண் பூரணி. இவர் செவ்வாய்க்கிழமையன்று (செப்டம்பர் 12) ரூபாய் மூன்று லட்சத்து பத்தாயிரம் மதிப்புள்ள 7 பவுன் தங்க நெக்லஸ், இரண்டு புது பட்டு புடவைகள் ஆகியவற்றை ஒரு பையில் வைத்து திருநெல்வேலி - செங்கோட்டை ரயிலில் பயணம் செய்தார். ரயில் கீழப்புலியூர் வந்தவுடன் தங்க நகை வைத்திருந்த பையை ரயிலில் மறந்து வைத்து விட்டு இறங்கி விட்டார். உடனடியாக ரயில் புறப்பட்டு விட்டதால், கீழப்புலியூர் ரயில் நிலைய அதிகாரியிடம் தகவல் தெரிவித்தார். அவர் உடனடியாக செங்கோட்டை ரயில்வே பாதுகாப்பு படை வீராங்கனை பி.பொற்செல்விக்கு தகவல் தெரிவித்து தங்க நகை பையை தேட அறிவுறுத்தினார். ரயில் செங்கோட்டை வந்தவுடன், பூரணி பயணம் செய்த ரயில் பெட்டியில் பொற்செல்வி சோதனை செய்தார். தவறவிட்ட நகைப் பையை எடுத்து ரயில்வே பாதுகாப்பு படை அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்தார். பின்பு பூரணி செங்கோட்டை ரயில் நிலையத்திற்கு வந்து பை பற்றிய அடையாளங்களை கூறி செங்கோட்டை ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் சிவக்குமாரிடம் பெற்றுக் கொண்டார். ரயில்வே பாதுகாப்பு படை வீராங்கனை பொற்செல்வியின் சமயோசித செயலுக்கு உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

ரயிலில் தவறவிட்ட 3 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள 7 பவுன் தங்க நகை மீட்பு.
 

Tags : 3 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள 7 பவுன் தங்க நகை மீட்பு.

Share via

More stories