கேரளாவில் கனமழை.. 2 குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழப்பு

by Editor / 13-10-2021 11:01:35am
கேரளாவில் கனமழை.. 2 குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழப்பு

திருவனந்தபுரம்: அண்டை மாநிலமான கேரளாவில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு கனமழை பெய்து வரும் நிலையில், மழை தொடர்பான விபத்துகளில் 2 குழந்தைகள் உட்பட குறைந்தது 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

அண்டை மாநிலமான கேரளாவில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. கிழக்கு மத்திய அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகக் கேரளாவின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வரும் 16ஆம் தேதி வரை கேரளாவில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் மழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் எர்ணாகுளம், இடுக்கி, கோட்டயம், வயநாடு உள்பட 9 கேரள மாவட்டங்களுக்கு அக்டோபர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.மேலும், அதி தீவிர கனமழை பெய்யும் என்பதால் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் அம்மாநில அரசு எச்சரித்துள்ளது. இதனால் பொதுமக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்தச் சூழலில் கேரள மாநிலத்தில் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட விபத்தில் 2 குழந்தைகள் உட்பட குறைந்தபட்சம் 4 பேர் உயிரிழந்துள்ளனர்

பத்தனம்திட்டா மாவட்டத்திலுள்ள அடூரில் இரவு பணி முடிந்து வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த மலையாள செய்தியாளர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தார். அதேபோல செவ்வாய்க்கிழமை அதிகாலை நேரத்தில் மலப்புரம் மாவட்டத்திலுள்ள கரிப்பூரில் வீட்டின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதில் 6 மாத கைக்குழந்தையும் 7 வயது சிறுமியும் உயிரிழந்தனர்..வீட்டின் மற்றொரு புறத்தில் தூங்கிக் கொண்டிருந்த குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பினர்.

தெற்கு கேரளாவில் உள்ள கொல்லம் மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் தொழிலாளி ஒருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மரணமடைந்தார். இப்படி பல்வேறு விபத்துகளில் குறைந்தபட்சம் 4 பேர் வரை உயிரிழந்துள்ளனர். கேரளாவில் பல்வேறு இடங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக மல்லபுரத்தில் உள்ள விமான நிலையத்தில் 254 மிமி மழைப் பதிவாகியுள்ளது. மேலும், கோழிக்கோட்டில் 216 மிமி மழையும், கன்னூரில் 166 மிமி மழையும் பதிவாகியுள்ளது. கோழிக்கோடு மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், மக்களுக்கு உதவும் வகையில் அங்கு கன்ட்ரோல் ரூம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

 

Tags :

Share via