மதுரை - திருச்சி இரட்டை வழிப் பாதையில் 13. ஆம் தேதி ஜி,எம்,ஆய்வு

by Editor / 12-12-2021 06:16:45pm
 மதுரை - திருச்சி இரட்டை வழிப் பாதையில் 13. ஆம் தேதி ஜி,எம்,ஆய்வு

தெற்கு ரயில்வே பொதுமேலாளர் சென்னை, சேலம், திருச்சி, மதுரை, பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய கோட்டங்களில் வருடத்திற்கு ஒருமுறை ஒரு ரயில்வே பிரிவை ஆய்வு செய்வது வழக்கம். அதன்படி திங்கட்கிழமை அன்று (13.12.2021) மதுரை - திருச்சி இரட்டை வழிப் பாதையில் "அப் லைனில்" ஆய்வு செய்ய இருக்கிறார். மதுரை ரயில் நிலையத்தில் காலை 9 மணிக்கு துவங்கும் ஆய்வு ரயில் நிலையம், பயணச்சீட்டு அலுவலகம், பார்சல் அலுவலகம், ரயில் பெட்டி பராமரிப்பு மையம், ரயில்வே மருத்துவமனை, 140 டன் பளு தூக்கி எந்திரம் ஆகியவற்றை காலை 10.15 மணி வரை ஆய்வு செய்கிறார். வழியில் சமயநல்லூர் ரயில் நிலையத்தில் ரயில் பாதை மாற்றும் இணைப்புகளை ஆய்வு செய்துவிட்டு சோழவந்தான் ரயில் நிலையத்தில் இணைப்பு இல்லாத ஒரே கர்டர் தூண்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நடை மேம்பாலத்தை ஆய்வு செய்கிறார். வாடிப்பட்டி - கொடைரோடு இடையே வலதுபக்க ரயில் பாதை வளைவையும், அம்பாத்துரை - திண்டுக்கல் இடையே ஒரு ரயில்வே லெவல் கிராசிங் கேட்டையும் ஆய்வு செய்கிறார். பின்பு திண்டுக்கல் ரயில் நிலையத்தில் ரயில்வே குடியிருப்பு, ரயில்வே மருத்துவமனை, ரயில் ஓட்டுனர் ஓய்வு அறைகள், புனரமைக்கப்பட்ட திருமண மண்டபம் ஆகியவற்றையும் ஆய்வு செய்கிறார். மதிய உணவிற்கு பிறகு வடமதுரை - அரியலூர் இடையே உள்ள ரயில் பாலத்தை ஆய்வு செய்துவிட்டு வையம்பட்டி ரயில் நிலையத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணியாளர்களை சந்தித்து அவர்களது பணி மற்றும் ஊழியர் நலம் குறித்து ஆலோசனை செய்கிறார். வையம்பட்டி அருகே ரயில் பாதையை குறுக்கிடும் 400 கிலோவாட் மின்தடத்தையும் ஆய்வு செய்கிறார். பின்பு வையம்பட்டி - திருச்சி இடையே ரயில் வேக சோதனை ஓட்டம் நடத்தி திருச்சியில் மாலை 5 மணிக்கு ஆய்வு  நிறைவடைகிறது.

 

Tags :

Share via