இந்திய பொருளாதாரம் நடப்பு ஆண்டில் 9.5% வளர்ச்சி அடையும்: சர்வதேச நிதியம்

by Editor / 13-10-2021 04:12:52pm
 இந்திய பொருளாதாரம் நடப்பு ஆண்டில் 9.5% வளர்ச்சி அடையும்: சர்வதேச நிதியம்


இந்திய பொருளாதாரம் நடப்பாண்டில் 9.5 விழுக்காடு வளர்ச்சி அடையும் என சர்வதேச நிதியம் கணித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்திய பொருளாதாரம் கடந்த ஆண்டு 7.3 விழுக்காடு சரிவை சந்தித்தது. மேலும், கொரோனா காரணமாக இந்தியாவின் ஜிடிபி தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இது நடப்பு நிதியாண்டில் 9.5 விழுக்காடு வளர்ச்சியை அடையும் என்றும் அடுத்த நிதியாண்டில் இது 8.5 விழுக்காடாக இருக்கும் எனவும் சர்வதேச நிதியம் (ஐ.எம்.எப்) கணித்துள்ளது.


அமெரிக்காவின் பொருளாதார வளா்ச்சி 2021இல் 6 சதவீதமாகவும், 2022 இல் 5.2 சதவீதமாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பொருளாதார வல்லரசு நாடான சீனா, நடப்பு நிதி ஆண்டில் 8 சதவீதமும், அடுத்த நிதி ஆண்டில் 5.6 சதவீதமும் பொருளாதார வளர்ச்சி காணும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.


உலக பொருளாதாரம் நடப்பு நிதி ஆண்டில் 5.9 சதவீதமும், அடுத்த நிதி ஆண்டில் 4.9 சதவீதம் வளர்ச்சி அடையும் எனவும் தெரிய வந்துள்ளது. வணிக வளர்ச்சிக்கான சீர்திருத்தங்களை மேற்கொண்டது மற்றும் தடுப்பூசி போடுவதை வேகப்படுத்தியது போன்ற நடவடிக்கைகளால், கொரோனா பாதிப்புகளிலிருந்து இந்திய பொருளாதாரத்தின் மீட்சி விரைவுபடுத்தப் பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆண்டுதோறும் நடைபெறும் உலக வங்கி, சர்வதேச நிதியம் ஆகியவற்றின் கூட்டம் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், உலக பொருளாதார நிலை குறித்து சர்வதேச நிதியம் வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 

Tags :

Share via