தொழிலாளி கொலை வழக்கில் திமுக எம்.பி.க்கு ஒரு நாள் சிபிசிஐடி காவல்

by Editor / 13-10-2021 04:16:52pm
 தொழிலாளி கொலை வழக்கில் திமுக எம்.பி.க்கு ஒரு நாள் சிபிசிஐடி காவல்


முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் திமுக எம்.பி. ரமேஷை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு அனுமதி அளித்து கடலூர் தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கடலூரில் திமுக எம்.பி ரமேஷ் குடும்பத்துக்குச் சொந்தமான முந்திரி ஆலையில் பணியாற்றி வந்த கோவிந்தராஜ் என்ற தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவரை அடித்து தாக்கியிருந்தது தெரியவந்தது.இதுதொடர்பாக காடம்புலியூர் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து எம்.பி.ரமேஷ் உட்பட 6 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்த அக்டோபர் 11ஆம் தேதி பண்ருட்டியில் உள்ள ஜே.எம்.1. நீதிமன்றத்தில் எம்.பி. ரமேஷ் சரணடைந்தார். அவரை இரண்டு காவலில் வைக்க நீதிபதி கற்பகவல்லி உத்தரவிட்டதைத் தொடர்ந்து கடலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.


இந்நிலையில்  எம்.பி.ரமேஷ் கடலூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் போலீஸ் பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, சிபிசிஐடி போலீஸார் அவரைக் காவலில் எடுத்து விசாரணை நடத்த நீதிமன்றத்தில் மனு அளித்தனர். இந்த மனுவை ஏற்ற நீதிபதி பிரபாகர், சிபிசிஐடி போலீஸார் ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

 

 

Tags :

Share via