எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி – ஓ.பி.எஸ். மாலை

by Editor / 17-10-2021 03:40:25pm
எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி – ஓ.பி.எஸ். மாலை

அண்ணா தி.மு.க. பொன் விழாவை முன்னிட்டு இன்று அண்ணா தி.மு.க. தலைமை கழகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் ஜெயலலிதா சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். கட்சிக் கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார்கள்.

மக்கள் தொண்டில் மகத்தான 50 ஆண்டுகள் என்ற தலைப்பில் அண்ணா தி.மு.க. பொன்விழா சிறப்பு மலரையும் வெளியிட்டார்கள்.

இதனை தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் ஜெயலலிதா நினைவிடத்திலும் மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

இந்த நிகழ்ச்சிகளில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மிகுந்த எழுச்சியுடனும், உற்சாகத்துடனும் கலந்து கொண்டார்கள்.அண்ணா தி.மு.க.வை 1972 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17 ந் தேதி எம்.ஜி.ஆர். துவக்கினார். இந்த ஆண்டு அண்ணா தி.மு.க. பொன் விழா ஆண்டு துவக்கமாகும். பொன் விழாவையொட்டி தலைமை கழகத்திற்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்படும், பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பெயரில் விருதுகள் வழங்கப்படும் உட்பட ஏராளமான அறிவிப்புகளை 2 தினங்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் வெளியிட்டார்கள்.

இன்று அண்ணா தி.மு.க. பொன்விழா தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. எல்லா இடங்களிலும் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா படம் அலங்கரிக்கப்பட்டு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அன்னதானம், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

பாரத் ரத்னா’ பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டு; கழக நிரந்தரப் பொதுச் செயலாளர் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மாவால் போற்றி வளர்க்கப்பட்ட அண்ணா தி.மு.க. இன்று பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளதைக் கொண்டாடும் வகையில், கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும்,

முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர், சென்னை ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலை, தலைமைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்.; புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது திருஉருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து, கழகக் கொடியினை ஏற்றி வைத்து, இனிப்பு வழங்கினார்கள்.

தொடர்ந்து, நமது புரட்சித் தலைவி அம்மா நாளிதழ் சார்பில் தயார் செய்யப்பட்டுள்ள கழகத்தின் பொன்விழா சிறப்பு மலரை வெளியிட, முதல் பிரதியை கழக அமைப்புச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான சி. பொன்னையன் பெற்றுக்கொண்டார். பின்னர், தலைமைக் கழக வளாகத்தில், நிர்வாகிகளில் பலர் கொண்டு வந்திருந்த இனிப்புகளை, கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகளுக்கு வழங்கினார்கள்.

ரூ.15 லட்சம் நிதிஉதவி

அதனைத் தொடர்ந்து, கழகப் பணியாற்றும்போது அகால மரணமடைந்த 5 கழக உடன்பிறப்புகளின் குடும்பங்களுக்கு, ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி மு. பழனிசாமி ஆகியோர், கழகத்தின் சார்பில் தலா 3 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 15 லட்சம்- ரூபாய்க்கான வரைவோலைகளை குடும்ப நல நிதியுதவியாக வழங்கி, ஆறுதல் கூறினார்கள்.

ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர், கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் சார்பில் தயார் செய்யப்பட்டுள்ள கழகப் பொன்விழா பாடல் தொகுப்பின் முதல் பாடல் அடங்கிய குறுந்தகட்டினை வெளியிட்டார்கள். மேலும், கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பேராசிரியர் முனைவர் சா. கலைப்புனிதன் எழுதிய ‘‘புரட்சித் தலைவி அம்மா புனித காவியம்’’ என்ற கவிதை நூலினை வெளியிட்டார்கள்.

அன்னதானம்

கழக பொன்விழாவை முன்னிட்டு, தலைமைக் கழகம் அருகில் உள்ள திருமண மண்டபத்தில், கழக வர்த்தக அணியின் சார்பில், அதன் செயலாளர் வி.என்.பி. வெங்கட்ராமன் ஏற்பாடு செய்திருந்த அன்னதான நிகழ்ச்சியை ஓ. பன்னீர்செல்வம்; எடப்பாடி பழனிசாமி ஆகியோர் துவக்கி வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து, பொன்விழா நிகழ்ச்சிக்கு வந்திருந்த கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகளுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

தலைமைக் கழகத்தில் நிதியுதவி வழங்குதல் மற்றும் குருந்தகடு, புத்தகம் வெளியிடுதல் முதலான நிகழ்ச்சி நிரலை, கழக இலக்கிய அணிச் செயலாளரும், கழக செய்தித் தொடர்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான முனைவர் வைகைச்செல்வன் தொகுத்து வழங்கினார்.

தொண்டர்கள் உற்சாகம்

கழகத்தின் பொன்விழா ஆண்டையொட்டி, தலைமைக் கழகம் அமைந்துள்ள சாலையின் இரு மருங்கிலும் பெருந்திரளான அளவில் கழக உடன்பிறப்புகள் திரண்டிருந்து, கழகக் கொடிகளை தங்கள் கைகளில் ஏந்தியும், கழக அண்ணா தொழிற்சங்க உடன்பிறப்புகள் தொழிற்சங்கக் கொடிகளை தங்கள் கைகளில் ஏந்தியும், வாழ்த்து கோஷம் எழுப்பினார்கள்.

மேலும், தலைமைக் கழக நுழைவு வாயில் முன்பு செண்டை மேளம், பேண்டு வாத்தியம் முழங்க, கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, தலைமைக் கழக நுழைவு வாயில் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு, தலைமைக் கழகக் கட்டடம் புதுவண்ணம் பூசப்பட்டு, மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஓ.பன்னீர்செல்வம் காலை 10.20 மணி அளவிலும், எடப்பாடி பழனிசாமி காலை 10.40 மணி அளவிலும் தலைமை கழகத்திற்கு வந்தார்கள். இரு தலைவர்களும் வந்த போது தொண்டர்கள் பலத்த கோஷம் எழுப்பியும் பூச்செண்டுகள், சால்வைகள் கொடுத்தும் வரவேற்றார்கள்.

எம்.ஜி.ஆர். பாடல்கள்

அண்ணா தி.மு.க. தலைமை கழகத்திற்கு வெளியே எம்.ஜி.ஆர். பாடல்களையும், அண்ணா தி.மு.க. கொள்கை விளக்க பாடல்களையும், ஆர்.கே. குமார் தனது குழுவினருடன் மிக சிறப்பாக கலைநிகழ்ச்சியை நடத்தினார்.

தலைமை கழகத்திற்கு வந்த தொண்டர்கள் ஏராளமான பேர் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் வணங்கினார்கள். அருகே நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.

இந்த நிகழ்ச்சியில் அண்ணா தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர். வைத்திலிங்கம், அண்ணா தி.மு.க. நிர்வாகிகள் கே.ஏ.செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், தம்பிதுரை, எஸ்.பி. வேலுமணி, பி.தங்கமணி, அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் அ.தமிழ்மகன் உசேன், பா.வளர்மதி, எஸ்.கோகுல இந்திரா, ஜெயக்குமார், செல்லூர் ராஜூ, என்.தளவாய் சுந்தரம், கடம்பூர் ராஜூ, டாக்டர் விஜய பாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், ஜெ.சி.டி. பிரபாகர், மனோஜ் பாண்டியன், செம்மலை, எஸ்.ஆர். விஜயகுமார், என்.ஆர். சிவபதி, எஸ்.ஆர்.விஜயகுமார், நடிகை விந்தியா, மாவட்ட செயலாளர்கள் நா.பாலகங்கா, விருகை வி.என்.ரவி, தி.நகர் சத்யா, ஆர்.எஸ்.ராஜேஸ், டி.ஜி.வெங்கடேஷ்பாபு, ஆதி ராஜாராம், எம்.கே. அசோக், கே.பி.கந்தன், முன்னாள் எம்.எல்.ஏ. கே.குப்பன், டி.சிவராஜ், பெரும்பாக்கம் ராஜசேகர், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பிராட்வே எம்.இஸ்மாயில்கனி, ராயபுரம் மனோ, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் வி.முருகன், மாணவர் அணி துணைச்செயலாளர் ஆ.பழனி, தி.நகர் ஆறுமுகம், வி.எஸ்.சதீஷ்பாபு, அடையாறு பாண்டியன், பி.சின்னையன், பகுதி அவைத்தலைவர் நுங்கை மாறன், ஆயிரம்விளக்கு பகுதி அண்ணா தொழிற்சங்க செயலாளர் நுங்கை மனோகர், வேல்ஆதித்தன் உட்பட ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.

 

Tags :

Share via