அண்ணா தி.மு.க. ஆட்சி அமைய நாம் அனைவரும் பாடுபட வேண்டும்

by Editor / 17-10-2021 03:43:19pm
அண்ணா தி.மு.க. ஆட்சி அமைய நாம் அனைவரும் பாடுபட வேண்டும்

சென்னை தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவில்லத்திற்கு சசிகலா வந்தார். அங்கு எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அண்ணா தி.மு.க. கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார். அங்கு கொடியேற்றும் நிகழ்ச்சியையொட்டி கல்வெட்டு திறக்கப்பட்டது. அந்த கல்வெட்டில் அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா என கல்வெட்டு பொறிக்கப்பட்டு இருந்தது.

இதனைதொடர்ந்து எம்.ஜி.ஆரின் இல்லமான ராமாவரம் தோட்டத்திற்கு சசிகலா சென்றார். அங்கு எம்.ஜி.ஆரின் சிலை மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அங்கும் அண்ணா தி.மு.க. கொடிகள் சுற்றிக் கட்டப்பட்டிருந்தன. எம்.ஜி.ஆர். சிலைக்கு சசிகலா மாலை அணிவித்து வணங்கினார். அண்ணா தி.மு.க. கொடியை ஏற்றி வைத்தார்.

அங்கிருந்த தொண்டர்கள் கோஷம் எழுப்பி பலத்த ஆரவாரம் செய்தார்கள்.

இதனை தொடர்ந்து அங்குள்ள காது கேளாதோர் பள்ளி மாணவர்களுக்கு உபகரணங்களை வழங்கினார். பின்னர் பள்ளி மாணவர்களுக்கு தன் கைப்பட உணவு பரிமாறினார்.இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் மாவட்ட துணை செயலாளர் என்.வைத்தியநாதன் செய்திருந்தார்.ராமாவரம் தோட்டத்தில் முன்னதாக நடந்த நிகழ்ச்சியில் சசிகலா பேசினார். துணை பொதுச்செயலாளர் ஜி.செந்தமிழன், மாவட்ட செயலாளர் கரிகாலன், முன்னாள் எம்.எல்.ஏ. நரசிம்மன் உட்பட பலர் பேசினார்கள்.இறுதியாக சசிகலா பேசியதாவது:

அண்ணா தி.மு.க.வின் பொன்விழா ஆண்டு இன்று கொண்டாடப்படுகிறது. இப்போது அண்ணா தி.மு.க. ஆட்சிக் கட்டிலில் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.நெருக்கடி என்னைச் சூழ்ந்த போதிலும் கழகத்தை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்துதான் நான் சென்றேன். என்னால் கழகத்திற்கு எள்முனையளவும் பாதிப்பு வந்துவிடக் கூடாது என்பதற்காகத் தான் நான் தேர்தலில் இருந்து ஒதுங்கியிருந்தேன். எம்.ஜி.ஆரின் தியாகம், ஜெயலலிதாவின் அர்ப்பணிப்பு ஆகியவற்றால் வளர்ந்த கழகத்தைக் காலம் முழுக்க பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. இதற்கு நம்மிடம் ஒற்றுமை ஏற்பட வேண்டும். நீர் அடித்து நீர் விலகாது. நமக்குள் ஏற்பட்ட பிரிவு எதிரிக் கூட்டத்திற்கு இடம் கொடுத்துவிட்டது.

‘‘கழகத்தின் அடிநாதம் தொண்டர்கள்’’ என்று எம்.ஜி.ஆர். கூறுவார். ‘‘மக்களுக்காக நான்’’ என்று ஜெயலலிதா கூறுவார். 50 ஆண்டுகளில் மக்களின் அன்பைப் பெற்று தமிழ்நாட்டில் 33 ஆண்டுகள் அண்ணா தி.மு.க. ஆட்சியில் இருந்தது. கழகத்தின் மாபெரும் இரு தலைவர்கள், தொண்டர்கள், தமிழ்நாட்டு மக்கள் ஆகியோர்களால் தான் இப்போது கழகம் இரும்புக் கோட்டையாக மாறியிருக்கிறதுதொண்டர்கள், மக்களின் நலனில் நாம் அக்கறை காட்டாவிட்டால் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தும் நாம் தூக்கி எறியப்படுவோம் என்ற உண்மையை அனைவரும் உணரவேண்டும். கழகத்துக்காகவும் தொண்டர்களுக்காகவும் மக்களுக்காகவும் நாம் இணைந்து நிற்க வேண்டிய நேரம் இது.எம்.ஜி.ஆர். மறைந்த பிறகு இதே ராமாவரம் வீட்டில் வைத்துதான் ஜானகி அம்மாள் என்னை அழைத்துப் பேசினார்.

அப்போது அவர் ‘கட்சி ஒன்றுபட வேண்டும்’ என்று என்னிடம் கூறி அவரே நல்ல முடிவு எடுத்தார். இதனால் ஜெயலலிதா எடுத்த பெரும் முயற்சியால் தமிழ்நாட்டில் மீண்டும் அண்ணா தி.மு.க. ஆட்சி அமைந்தது.தற்போது தமிழ்நாட்டில் கழகத்தின் ஆட்சி அமைய நாம் அனைவரும் பாடுபட வேண்டும். நாம் ஒன்றாக வேண்டும்; கழகம் வென்றாக வேண்டும்.இவ்வாறு சசிகலா பேசினார்.

 

Tags :

Share via