கேரளாவில் கன மழை: பலி எண்ணிக்கை 18ஆக உயர்ந்தது

by Editor / 17-10-2021 03:45:46pm
கேரளாவில் கன மழை: பலி எண்ணிக்கை 18ஆக  உயர்ந்தது

கேரளாவின் தென்கிழக்கு அரபி கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக கடந்த 2 நாட்களாக கேரளா முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கோட்டயம், மலப்புரம், ஆலப்புழா, இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர் மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. தொடர் மழை காரணமாக சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. கேரளாவில் நேற்று பெய்த மழை, கடந்த 2018 மற்றும் 2019-ம் ஆண்டு ஏற்பட்ட பெருமழை வெள்ளத்தை நினைவு படுத்தியதாக கேரள மக்கள் அச்சத்துடன் தெரிவித்தனர்.

பலத்த மழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையடி வாரத்தில் அமைந்துள்ள இடுக்கியில் நிலச்சரிவு ஏற்பட்டது. கூட்டுக்கல், பெருவந்தனம் கிராமங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 10-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தது. கோட்டயம் மாவட்டம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு 4 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் 10 பேரை காணவில்லை. இதில் இருந்தவர்கள் மண்ணுக்குள் புதைந்தனர். தகவல் அறிந்ததும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் அங்கு விரைந்துச் சென்று அவர்களை மீட்டனர்.

மீட்பு பணி தீவிரம்

நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி உடனடியாக நடந்தாலும் இன்னும் 22 பேரை காணவில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அங்கு கடற்படை மற்றும் ராணுவத்தினர் மண்ணில் புதைந்தவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மழை தொடர்ந்து பெய்து வருவதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அங்கு வருவாய்த்துறை அதிகாரிகள் முகாமிட்டு உள்ளனர். அவர்கள் மீட்பு பணியை முடுக்கி விட்டுள்ளனர். இடுக்கி மாவட்டம் பூவஞ்சி பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அங்கும் 10 பேரை காணவில்லை. இவர்கள் மண்ணில் புதைந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் மழைக்கு கோட்டயம் மற்றும் இடுக்கியில் 2 பெண்களும், ஒரு குழந்தையும் இறந்தனர். இது போல தொடுபுழா அருகே அரக்குளம் ஆற்றுப்பாலத்தில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் சிக்கிய கார், அடித்துச் செல்லப்பட்டது. இதில் காரில் இருந்த பெண் உள்பட 2 பேர் பலியானார்கள். இதில் பெண்ணின் உடல் காணியாந்தோடு பகுதியில் மீட்கப்பட்டது. அவருடன் இருந்தவரின் உடலை தேடும் பணி நடக்கிறது. பத்தனம்திட்டா பகுதியிலும் மழைக்கு 2 பேர் பலியானார்கள். இவர்களையும் சேர்த்து மழைக்கு இதுவரை 18 பேர் பலியாகி உள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

மேலும் ராணுவ ஹெலி காப்டர்களும் மோசமான வானிலை காரணமாக அந்த பகுதிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இன்று காலையில் மழை சற்று குறைந்ததும் பேரிடர் மீட்பு குழுவினர் அங்குச் சென்று நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்டு வருகிறார்கள்.

கேரளாவில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்நிலையில், திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், ஆலப்புழா, எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம் மற்றும் கோழிக்கோடு ஆகிய 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தநிலையில் கேரளாவின் பெரும்பாலான பகுதிகளில் இன்று காலை முதல் தீவிர மழை சற்று குறைந்துள்ளது, இருப்பினும், இரவு முழுவதும் தொடர்ந்து மழை பெய்ததால் அதன் பாதிப்பு தொடர்கிறது. முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது. கோட்டயம் உட்பட மாநிலத்தில் கனமழை காரணமாக வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கி தவிக்கும் மக்களை வெளியேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கோவிட் நெறிமுறையைப் பின்பற்றி முகாம்களைத் தொடங்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

 

Tags :

Share via