மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி மலர ஓயாது உழைப்போம்; சூளுரைப்போம்-ஓ.பன்னீர்‌ செல்வம்‌

by Editor / 17-10-2021 03:56:06pm
மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி மலர ஓயாது உழைப்போம்; சூளுரைப்போம்-ஓ.பன்னீர்‌ செல்வம்‌

அண்ணா தி.மு.க. 50வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி அண்ணா தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், முன்னாள்‌ முதலமைச்சருமான ஓ.பன்னீர்‌ செல்வம்‌ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

துணிவு, தூய்மை, தன்னல மறுப்பு ஆகிய உயர்ந்த பண்புகளின்‌ உறைவிடமான புரட்சித்‌ தலைவர்‌ எம்‌.ஜி.ஆரால்‌ தோற்றுவிக்கப்பட்ட அண்ணா தி.மு.க. எனும்‌ மாபெரும்‌ மக்கள்‌ இயக்கம்‌ பொன்விழா கொண்டாடுகிறது.

பேரறிஞர்‌ அண்ணாவின்‌ கொள்கைகளால்‌ ஈர்க்கப்பட்டு, தி.மு.க-வில்‌ தன்னை இணைத்துக்‌ கொண்டவரும்‌, தன்னுடைய திரைப்படங்களின்‌ பாடல்கள்‌ வாயிலாக தி.மு.க-.வின்‌ வளர்ச்சிக்கும்‌, வெற்றிக்கும்‌ உறுதுணையாக இருந்தவர்‌ புரட்சித்‌ தலைவர்‌ எம்‌.ஜி.ஆர்‌. அன்றும்‌, இன்றும்‌ மக்களை ஈர்க்கும்‌ மகத்தான சக்தியாய்‌ அவர்‌ விளங்குகிறார்‌.

பேரறிஞர்‌ அண்ணாவின்‌ மறைவிற்குப்‌ பின்‌, கணக்கு கேட்டதற்காக கட்சியை விட்டு நீக்கினார்கள்‌. மக்கள்‌ விரோத தீய சக்தியின்‌ ஆட்சியை அகற்றி, தர்மத்தையும்‌, நீதியையும்‌ நிலைநாட்ட புரட்சித்‌ தலைவர்‌ எம்‌.ஜி.ஆரால்‌ தோற்றுவிக்கப்பட்ட அண்ணா தி.மு.க. என்னும்‌ மாபெரும்‌ மக்கள்‌ இயக்கம்‌ இன்று (17 ந் தேதி) 49 ஆண்டு கால வெற்றிப்‌ பயணத்தை நிறைவு செய்து, 50 -வது பொன்‌ விழா ஆண்டில்‌ அடியெடுத்து வைக்கிறது என்பதையும்‌, இந்தப்‌ பொன்‌ விழா ஆண்டில்‌ மிகப்‌ பெரிய மக்கள்‌ இயக்கமாம்‌ அண்ணா தி.மு.க.வின்‌ ஒருங்கிணைப்பாளராகப்‌ பணியாற்றும்‌ பெரும்‌ பாக்கியம்‌ எனக்கு இறைவனால்‌ அருளப்பட்டிருக்கிறது என்பதையும்‌ நன்றியுடனும்‌, மகிழ்ச்சியுடனும்‌ நினைவில்‌ கொள்கிறேன்‌.

அண்ணா தி.மு.க. கடந்து வந்த லட்சியப்‌ பாதைகளை, நெருப்பாற்றில்‌ நீந்தி வந்த தியாகங்களை, எதிர்ப்போரை எல்லாம்‌ புறமுதுகு காட்டி ஓட வைத்த வரலாற்றுச்‌ சம்பவங்களை, “நேர்மை, தூய்மை, அஞ்சாமை” என்ற ஆயுதங்களால்‌, “பொய்மை, பொறாமை, கயமை” என்ற ஆயுதங்களை வீழ்த்தி வெற்றி வாகை சூடிய தேர்தல்‌ களங்களை, வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக்‌ கொண்டு உழைத்து வரும்‌ வெள்ளை மனம்‌ கொண்ட எனதருமைக்‌ கழகத்‌ தொண்டர்களின்‌ தூய உள்ளங்களை இந்தப்‌ பொன்‌ விழா ஆண்டில்‌ நினைத்துப்‌ பார்த்து பெருமிதம்‌ கொள்கிறேன்‌. கழகப்‌ பணியாற்றிய நேரத்தில்‌ உயிர்‌ நீத்த உத்தமத்‌ தொண்டர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துகிறேன்‌. கழகத்தை உயிரினும்‌ மேலாய்‌ மதித்து வாழும்‌ தொண்டர்கள்‌ அனைவருக்கும்‌ என்‌ இதயம்‌ கனிந்த நல்வாழ்த்துகளை இந்தத்‌ தருணத்தில்‌ தெரிவித்துக்‌ கொள்வதில்‌ மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்‌.

ஊழலைத் தட்டிக் கேட்க

பிறந்த ஒரே இயக்கம்

அரசியல்‌ வரலாற்றை உற்று நோக்கிப்‌ பார்த்தால்‌, ஏதோ ஒரு கணக்கோடு தான்‌ அரசியல்‌ கட்சிகள்‌ தோன்றுகின்றன. ஆனால்‌, கணக்கு கேட்டதற்காக, ஊழலை தட்டிக்‌ கேட்டதற்காக பிறந்த ஒரே இயக்கம்‌ அண்ணா தி.மு.க. என்னும்‌ மாபெரும்‌ மக்கள்‌ இயக்கம்‌. அதனால்‌ தான்‌, தோற்றுவிக்கப்பட்ட ஆறே மாதங்களில்‌ திண்டுக்கல்‌ மக்களவை இடைத்‌ தேர்தலைச்‌ சந்தித்து வெற்றி வாகை சூடி வரலாற்று அதிசயத்தை படைத்தது.

இதன்‌ தொடர்ச்சியாக, 1977 ம்‌ ஆண்டு தமிழ்‌நாடு சட்டமன்றப்‌ பொதுத்‌தேர்தலில்‌, ஊழலின்‌ ஊற்றுக்‌ கண்ணாக விளங்கிய தி.மு.க. ஆட்சி மக்களால்‌ அகற்றப்பட்டு, அண்ணா தி.மு.க. ஆட்சி மலர்ந்தது. புரட்சித்‌ தலைவரின்‌ ஆட்சியை எப்படியாவது அகற்றிவிட வேண்டும்‌ என்ற தி.மு.க-வின்‌ சதித்‌ திட்டம்‌ புரட்சித்‌ தலைவர்‌ எம்‌.ஜி.ஆர்‌. உயிரோடு இருந்தவரை செல்லுபடியாகாமால்‌ இருந்தது.

புரட்சித்‌ தலைவர்‌ எம்‌.ஜி.ஆரின்‌ மறைவிற்குப்‌ பிறகு, சில துரோகிகளின்‌ துணையோடு கழகத்தை அழிக்க நினைத்தார்‌ தி.மு.க. தலைவர்‌ மு. கருணாநிதி. இதன்‌ விளைவு, கழகத்தின்‌ வெற்றிச்‌ சின்னமாம்‌ “இரட்டை இலை” சின்னம்‌ முடக்கப்பட்டது. “சிங்கத்தின்‌ குகைக்குள்‌ பிளவு வந்தால்‌ சிறு நரிகள்‌ நாட்டாமையாகிவிடும்‌” என்ற சூழ்நிலை உருவாக்கப்பட்டு, அதன்‌ விளைவாக மக்கள்‌ விரோத ஆட்சி மீண்டும்‌ உருவானது. கழகம்‌ பிளவுபட்டதன்‌ காரணமாக தி.மு.க. ஆட்சியைப்‌ பிடித்தாலும்‌, “சேவல்‌” சின்னத்தில்‌ தனியாக களம்‌ கண்டு, தனக்குள்ள மக்கள்‌ செல்வாக்கை நிரூபித்து எதிர்க்கட்சித்‌ தலைவரானார்‌ புரட்சித்‌ தலைவி அம்மா. இதன்மூலம் தமிழ்‌நாட்டின்‌ முதல்‌ பெண்‌ எதிர்க்கட்சித்‌ தலைவர்‌ என்ற பெருமை அம்மாவை வந்தடைந்தது. இதனைத்‌ தொடர்ந்து பிளவுபட்டக்‌ கழகம்‌ மீண்டும்‌ ஒன்றிணைந்தது. முடக்கப்பட்ட “இரட்டை இலை” சின்னம்‌ புரட்சித்‌ தலைவி அம்மாவால் மீட்கப்பட்டது.இந்தச்‌ சூழ்நிலையில்‌, இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டதன்‌ காரணமாக தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டதையடுத்து, 1991 ம்‌ ஆண்டு நடைபெற்ற சட்டமன்றப்‌ பொதுத்‌ தேர்தலில்‌ அண்ணா தி.மு.க. மாபெரும்‌ வெற்றி பெற்று, புரட்சித்‌ தலைவி அம்மா தமிழ்‌நாட்டின்‌ முதலமைச்சராக பொறுப்பேற்றுக்‌ கொண்டார்.

1991 ம்‌ ஆண்டு முதல்‌ 1996 ம்‌ ஆண்டு வரையிலான அம்மாவின்‌ ஆட்சிக்‌ காலத்தில்‌, தொட்டில்‌ குழந்தைத்‌ திட்டம்‌, மகளிர்‌ சுய உதவிக்‌ குழுக்களை உருவாக்கியது, மகளிருக்கு என்று தனிக்‌ காவல்‌ நிலையங்களை உருவாக்கியது, உலகத்‌ தமிழ்‌ மாநாட்டினை நடத்திக்‌ காட்டியது, உலகத்‌ தரம்‌ வாய்ந்த நேரு விளையாட்டு அரங்கத்தை கட்டியது, காவல்‌ துறையை நவீனமயமாக்கியது என பல்வேறு திட்டங்கள்‌ தீட்டிச்‌ செயல்படுத்தப்பட்டன.

1996 ம்‌ ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின்‌ காரணமாக சோதனைகள்‌ ஏற்பட்டாலும்‌, “நிமிர்ந்த நன்னடையும்‌, நேர்கொண்ட பார்வையும்‌, நிலத்தில்‌ யாருக்கும்‌ அஞ்சாத நெறிகளும்‌, திமிர்ந்த ஞான செருக்குமாய்‌ இருக்க வேண்டும்‌” என்ற மகாகவி பாரதியாரின்‌ வரிகளுக்கு ஏற்ப, நெருப்பாற்றிலே நீந்தி, சவால்களை எதிர்கொண்டு, தடைக்கற்களை தகர்த்தெறிந்து, 2001 ம்‌ ஆண்டு நடைபெற்ற தமிழ்‌நாடு சட்டமன்றப்‌ பேரவைத்‌ தேர்தலில்‌ கழகத்தை அமோக வெற்றி பெறச்‌ செய்து, இரண்டாவது முறையாக தமிழ்‌ நாட்டின்‌ முதலமைச்சராக அம்மா ஆட்சிப்‌பீடத்தில்‌ அமர்ந்தார்.2001 முதல்‌ 2006 வரையிலான காலக்‌கட்டத்தில்‌, பயிர்க்‌ கடனுக்கான வட்டி மற்றும்‌ அபராத வட்டி தள்ளுபடி, அன்னதானத்‌ திட்டம்‌, பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச மிதிவண்டி வழங்கும்‌ திட்டம்‌, மழை நீர்‌ சேகரிப்புத்‌ திட்டம்‌, புதிய வீராணம்‌ திட்டம்‌, திருட்டு வி.சி.டி. ஒழிப்புத்‌ திட்டம்‌, முதலமைச்சர்‌ உழவர்‌ பாதுகாப்புத்‌ திட்டம்‌, தரிசு நில மேம்பாட்டுத்‌ திட்டம்‌ என எண்ணற்ற திட்டங்களை தமிழ்‌நாட்டு மக்களுக்கு அளித்தவர்‌ புரட்சித்‌ தலைவி அம்மா. இவற்றிற்கெல்லாம்‌ முத்தாய்ப்பாக, உலக நாடுகளே போற்றும்‌ வண்ணம்‌, வறட்சியையும்‌, சுனாமியையும்‌, பெரு வெள்ளத்தையும்‌ எதிர்கொண்டு, மீட்பு, நிவாரணம்‌ மற்றும்‌ மறுவாழ்வுப்‌ பணிகளை வெற்றிகரமாக மேற்கொண்ட பெருமை அம்மாவையே சாரும்‌.

நல்லாட்சி நல்கிய அம்மாவின்‌ ஆட்சியை அகற்றுவது கடினம்‌ என்று உணர்ந்த தி.மு.க. தலைவர்‌ மு. கருணாநிதி 2006 ம்‌ ஆண்டு பொதுத்‌ தேர்தலில்‌ மெகா கூட்டணி அமைத்து தேர்தலைச்‌ சந்தித்தார்‌. இருப்பினும்‌, தி.மு.க. தலைமையில்‌ மைனாரிட்டி ஆட்சி தான்‌ தமிழ்‌ நாட்டில்‌ அமைக்கப்பட்டது. அண்ணா தி.மு.க. 61 இடங்களில்‌ வெற்றி பெற்று மிகப்‌ பெரிய எதிர்க்கட்சியாக விளங்கியது.

அம்மா எதிர்க்கட்சித்‌ தலைவராகப்‌ பொறுப்பேற்றுக்‌ கொண்டு, மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியின்‌ அவலங்களான நில அபகரிப்பு, மின்‌ வெட்டு, இலங்கைத்‌ தமிழர்கள்‌ கொத்துக்‌ கொத்தாக கொன்று குவிப்பு, சட்டம்‌ ஒழுங்கு சீரழிவு, விலைவாசி உயர்வு, பெட்ரோல்‌ டீசல்‌ விலை உயர்வு, குடும்ப ஆதிக்கம்‌ ஆகியவற்றை சட்டமன்றத்திலும்‌, சட்டமன்றத்திற்கு வெளியிலும்‌ எடுத்துரைத்து, விழுப்பும்‌, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர்‌ ஆகிய இடங்களில்‌ பிரம்மாண்டமான கூட்டங்களை நடத்தி ஒரு புரட்சியை உருவாக்கினார். இந்தப்‌ புரட்சி எழுச்சியாக மாறி, 2011 ம்‌ ஆண்டு நடைபெற்ற பொதுத்‌ தேர்தலில்‌ அண்ணா தி.மு.க. அமோக வெற்றி பெற வழிவகுத்தது. இதன்மூலம்‌, அம்மாவின்‌ தலைமயில்‌ நல்லாட்சி அமைக்கப்பட்டது.

2011 -2016 ம்‌ ஆண்டு ஆட்சிக்‌ காலத்தில்‌, விலையில்லா அரிசி வழங்கும்‌ திட்டம்‌, மிக்ஸி-, கிரைண்டர்‌,- மின்விசிறி வழங்கும்‌ திட்டம்‌, தாலிக்கு தங்கத்துடன்‌ கூடிய திருமண நிதியுதவித்‌ திட்டம்‌, மாணவ, மாணவியருக்கு கட்டணமில்லா கல்வி, விலையில்லா சீருடைகள்‌, புத்தகங்கள்‌, நோட்டுப்‌ புத்தகங்கள்‌, காலணிகள்‌, புத்தகப்‌ பைகள்‌ உள்ளிட்ட ஏனைய உபகரணங்கள்‌ வழங்கும்‌ திட்டம்‌, கல்லூரி மாணவ, மாணவியருக்கு மடிக்கணினி வழங்கும்‌ திட்டம்‌, சூரிய மின்‌ சக்தியுடன்‌ கூடிய பசுமை வீடுகள்‌ திட்டம்‌, சட்டப்‌ போராட்டத்தின்‌ மூலம்‌ காவேரி நடுவர்‌ மன்ற இறுதித்‌ தீர்ப்பினை மத்திய அரசிதழில்‌ வெளியிடச்‌ செய்தது. முல்லைப்‌ பெரியாறு அணையின்‌ நீர்‌ மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்தியது என எண்ணற்ற திட்டங்களைத்‌ தீட்டி தமிழ்‌ நாட்டை முன்னேற்றப்‌ பாதையில்‌ அழைத்துச்‌ சென்றவர்‌ அம்மா.இதன்‌ காரணமாக, 2014 ம்‌ ஆண்டு நடைபெற்ற மக்களவைத்‌ தேர்தலில்‌, தமிழ்‌நாட்டில்‌ உள்ள 39 மக்களவைத்‌ தொகுதிகளில்‌, அண்ணா தி.மு.க. 37 தொகுதிகளில்‌ வெற்றி பெற்று நாடாளுமன்ற மக்களவையில்‌ மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது.இதனைத்‌ தொடர்ந்து, 2016 ம்‌ ஆண்டு நடைபெ தமிழ்‌ நாடு சட்டமன்றப்‌ பேரவைக்கான பொதுத்‌ தேர்தலில்‌, அண்ணா தி.மு.க. முதன்‌ முறையாக 234 தொகுதிகளிலும்‌ தனித்தே போட்டியிட்டு, 92 ஆண்டுகளுக்குப்‌ பிறகு, ஆண்ட கட்சியே மீண்டும்‌ ஆட்சிக்கு வந்தது என்ற பெருமையை பெற்றது. இந்தத்‌ தொடர்‌ வெற்றிக்குக்‌ காரணம்‌ அம்மாவின்‌ தீர்க்கமான முடிவு, ஓயாத உழைப்பு, துணிச்சலான செயல்பாடு ஆகியவைதான்‌.

கை நழுவிப்

போனது ஆட்சி

புரட்சித்‌ தலைவி அம்மாவின்‌ மறைவினையடுத்து, அம்மாவின்‌ வழிகாட்டுதலோடு நடைபெற்ற அண்ணா தி.மு.க. ஆட்சிக்‌ காலத்தில்‌, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜல்லிக்கட்டு விளையாட்டு மீண்டும்‌ துவக்கம்‌, எய்ம்ஸ்‌ மருத்துவமனை, ஒரே ஆண்டில்‌ 11 மருத்துவக்‌ கல்லூரிகளுக்கு அனுமதி, 15,000 கோடி ரூபாய்‌ செலவில்‌ அரசு ஊழியர்கள்‌, ஆசிரியர்கள்‌ மற்றும்‌ ஓய்வூதியதாரர்களுக்கு ஊதிய உயர்வு, பயிர்க்‌ கடன்‌ தள்ளுபடி, அரசுப்‌ பள்ளியில்‌ பயிலும்‌ மாணவ, மாணவியருக்கு மருத்துவப்‌ படிப்பில்‌ 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு என பல்வேறு திட்டங்கள்‌ நிறைவேற்றப்பட்டன.இந்தத்‌ தருணத்தில்‌, 2021 ம்‌ ஆண்டுக்கான தமிழ்‌நாடு சட்டமன்றப்‌ பேரவை பொதுத்‌ தேர்தலில்‌ அண்ணா தி.மு.க. மூன்றாவது முறையாக மீண்டும்‌ தொடர்ந்து ஆட்சியைப்‌ பிடிக்கும்‌ என்று நினைத்துக்‌ கொண்டிருந்த நேரத்தில்‌, எதிரணியினர்‌ அமைத்த மெகா கூட்டணி, அள்ளி வீசிய சாத்தியமற்ற தேர்தல்‌ வாக்குறுதிகள்‌ காரணமாக ஆட்சி நம்மைவிட்டு கைநழுவிப்‌ போய்விட்டது.போலி வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்‌ கட்டிலில்‌ அமர்ந்துள்ள தி.மு.க., எந்தெந்த வாக்குறுதிகளை நம்பி மக்கள்‌ திமுக-விற்கு வாக்களித்தார்களோ அவற்றை நிறைவேற்ற முடியாமல்‌ திணறிக்‌ கொண்டிருக்கிறது. மொத்தத்தில்‌, “விடியலை நோக்கி’’ எனப்‌ பிரச்சாரம்‌ செய்துவிட்டு இன்று “விடியா அரசாக' காட்சி அளிக்கிறது. சட்டமன்றம்‌ அடுத்த வாரிசின்‌ புகழ்பாடும்‌ மன்றமாகிவிட்டது. சுருக்கமாகச்‌ சொல்ல வேண்டுமென்றால்‌, ஒரு குடும்பத்தின்‌ பிடியில்‌ தி.மு.க. சிக்கித்‌ தவித்துக்‌ கொண்டிருக்கிறது. “கெட்டிக்காரன்‌ புளுகு எட்டு நாளைக்கு” என்பதுபோல தி.மு.க.-வின்‌ சாயம்‌ வெளுத்துவிட்டது. வருகின்ற மக்களவைத்‌ தேர்தலில்‌ திமுக-விற்கு மரண அடி கொடுக்க மக்கள்‌ தயாராகிவிட்டார்கள்‌.

அண்ணா தி.மு.க. தோன்றி 49 ஆண்டுகள்‌ நிறைவு பெற்று, 50 -வது பொன்‌ விழா ஆண்டு தொடங்கும்‌ இப்பொன்னாளில்‌, நல்ல உள்ளமும்‌, நடுங்காத சிந்தனையும்‌, தூய நெஞ்சமும்‌, துயர்படுத்த முடியாத மனமும்‌ கொண்ட புரட்சித்‌ தலைவி அம்மாவின்‌ வழிகாட்டுதலோடு, அவர் வகுத்துக்‌ கொடுத்த பாதையில்‌ பயணித்து, மீண்டும்‌ அண்ணா தி.மு.க. ஆட்சி மலர ஓயாது உழைப்போம்‌ என நாம்‌ அனைவரும்‌ சூளுரைப்போம்‌.

புரட்சித்‌ தலைவர்‌ எம்‌.ஜி.ஆர்‌. நாமம்‌ வாழ்க! புரட்சித்‌ தலைவி அம்மா நாமம்‌ வாழ்க!

இவ்வாறு ஓ.பன்னீர்‌ செல்வம்‌ கூறியுள்ளார்.

 

Tags :

Share via