ஆன்லைனில் பகுதி நேர வேலை தருவதாக ரூ. 12 லட்சம் மோசடி

by Staff / 11-09-2023 01:08:15pm
ஆன்லைனில் பகுதி நேர வேலை தருவதாக ரூ. 12 லட்சம் மோசடி

ஆன்லைனில் பகுதி நேர வேலை தருவதாக கூறி ரூ. 12 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனா். சென்னை மணலியை சேர்ந்தவா் முகமது இலியாஸ் ( 38). அண்ணாநகா் கிழக்கு பகுதியை சேர்ந்தவா் தமிழ்செல்வம் (44). ஆன்லைனில் பகுதி நேர வேலை வாங்கித்தருவதாக விளம்பரம் செய்துள்ளனா். இதை நம்பி அடையாறு பகுதியைச் சேர்ந்த ஒருவா் ரூ. 12. 22 லட்சம் கொடுத்தாராம். ஆனால், அவா்கள் உறுதி அளித்தப்படி, வேலை வாங்கித் தராததால் பாதிக்கப்பட்ட அந்த நபா், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபா் கிரைம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் இலியாஸ், தமிழ்ச்செல்வம் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா். விசாரணையில் இவா்கள் போலி வங்கி கணக்கு தொடங்கி அதன் மூலம் மோசடி செய்த பணத்தை ஹாங்காங்கில் உள்ள ஒருவருக்கு அனுப்பி வந்தது தெரியவந்தது. இதேபோல பல்வேறு நபா்களிடம் இவா்கள் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து முகமது இலியாஸ், தமிழ்செல்வம் ஆகிய 2 பேரையும் போலீஸாா் கைது செய்தனா். அந்த வங்கிக் கணக்கில் இருந்த ரூ. 12 லட்சம் பணத்தை 'சைபா் கிரைம்' போலீசாா் முடக்கினா். இவா்ளிடம் இருந்து 7 கைப்பேசிகள், ஒரு மடிக்கணினி, ஒரு தனியாா் நிறுவனத்தின் போலி முத்திரை ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். இவா்கள் ஏற்கெனவே மோசடி புகாரில் புதுச்சேரி 'சைபா் கிரைம்' போலீஸாரால் கைது செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

 

Tags :

Share via