திமுக ஆட்சியில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் மு.க.ஸ்டாலின் உறுதி
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்வெளியிட்ட அறிக்கை :கொரோனா பரவல் கடுமையாக உள்ள நிலையில், புதிதாக ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை உருவாக்குவதில் கால தாமதம் ஏற்படும் என்கிற மருத்துவத் துறை சார்ந்த வல்லுநர்களின் கருத்தைக் கவனத்தில் கொண்டு, ஸ்டெர்லைட் ஆலைக்கு 4 மாத காலத்திற்கான தற்காலிக அனுமதி வழங்கிட நிபந்தனைகளுடன் ஒப்புக்கொண்டது தி.மு.கழகம். அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டில் வேறு எந்தெந்த வகையில் விரைவாக ஆக்சிஜன் உற்பத்தியைப் பெருக்க முடியும் என்ற அடிப்படையில் திருச்சி பெல் நிறுவனத்தில் முடங்கியுள்ள ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை விரைந்து மறு உருவாக்கம் செய்ய வேண்டும் என தி.மு.க.வின் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா எம்.பி. அவர்கள் மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதி வலியுறுத்தியுள்ளார். மக்களின் உயிர் காக்க எந்தெந்த வகையில், தமிழ்நாட்டின் மருத்துவத் தேவைக்கான ஆக்சிஜனை விரைந்து பெற முடியுமோ அதற்கான முயற்சிகளையும் ஒத்துழைப்பையும் வழங்கி வருகிறது
தி.மு.கழகம்.ஆக்சிஜனை பங்கிடும் பொறுப்பை மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் வழங்கியிருப்பதால், பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் உடனடியாக இதில் கவனம் செலுத்தி, ஸ்டெர்லைட்டில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை தமிழகத்தின் முழு தேவைக்கேற்ப பகிர்ந்தளிக்கும் பொறுப்பினை மேற்கொள்ள வேண்டும். இதுகுறித்து, பிரதமர் அலுவலகம் உடனடியாக தமிழக காபந்து அரசின் அதிகாரிகளுக்கும் வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். பேரிடர் நேரத்தில் தமிழ்நாட்டுக்கு எவ்வகையிலும் அநீதி இழைத்திடக் கூடாது என்பதை வலியுறுத்துகிறேன்.
ஸ்டெர்லைட் ஆலை தற்காலிக அனுமதியுடன், ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. வேறு எவ்வகையான செயல்பாட்டுக்காகவும் அல்ல. தி.மு.கழக அரசு அமைந்ததும், தற்காலிக அனுமதிக் காலம் முடிந்ததும் ஸ்டெர்லைட் ஆலை முழுமையாகச் சீல் வைக்கப்படும் என்ற உறுதியினை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Tags :