கட்சியின் விசுவாசியான எனக்கு அதிமுக உதவ முன்வரவில்லை-குண்டு கல்யாணம்.

by Editor / 24-10-2021 08:21:52pm
கட்சியின் விசுவாசியான எனக்கு அதிமுக உதவ முன்வரவில்லை-குண்டு கல்யாணம்.

அதிமுகவின் தலைமைக் கழகப் பேச்சாளராகப் பதவி வகிப்பவர் நடிகர் குண்டு கல்யாணம். இவர் தற்போது சீறுநீரகப் பிரச்னையால் அவதிப் படுவதாகவும் அதற்கான சிகிச்சை எடுக்கக் கூடப் பணம் இல்லாமல் தவிப்பதாகவும் தொடர்ந்து செய்திகள் வெளியானது.இதற்கிடையே அவர் பேட்டி அளித்துள்ளார். அதில்,

'அதிமுகவில் நான் மறைந்த தலைவர் எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து தொண்டனாக இருந்து வருகிறேன். அவர் கட்சி தொடங்குவதற்கு முன்பிருந்தே நான் அவரது தீவிர விசுவாசி. அதன்பிறகு நான் கட்சியின் தலைமைக் கழகப் பேச்சாளராகப் பல வருடங்களாகப் பணியாற்றி வருகிறேன். கட்சியில் ஐம்பது வருடங்களாக இருந்து வருகிறேன். கட்சிக்காக நான் ஏறாத மேடையில்லை. ஆனால் தற்போது வயது காரணமாக சீறுநீரகக் கோளாறால் அவதிப்படுகிறேன்.

இதற்காகத் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வருகிறேன். சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் வாரம் இரண்டுமுறை இதற்காக்ச் சென்று டயாலிசிஸ் செய்து வருகிறேன். டயாலிசிஸுக்கான செலவு பொதுவாகவே அதிகம் என்பதால் பொருளாதார நெருக்கடியால் அதனை சமாளிக்க முடியாத சூழலில் உள்ளேன். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கும் பல லட்சம் ரூபாய் செலவாகும்.


அதற்கான பொருளாதாரம் என்னிடம் இல்லை. என் மகள்தான் என்னைப் பார்த்துக்கொள்கிறார். அவரிடமும் இதற்கான பணவசதி இல்லை. பொருளுதவி கேட்டு நானும் தலைமைக்கு நிறையவே கடிதம் எழுதிவிட்டேன். ஆனால் யாரும் உதவ முன்வரவில்லை. எழுதி எழுதி எனது லெட்டர்பேட் தேய்ந்ததுதான் மிச்சம். எனது குரலைக் கட்சியினர் யாரும் செவிகொடுத்துக் கேட்கவில்லை.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மட்டும் அவ்வப்போது பொருளுதவி செய்து வந்தார். அவர் தவிர வேறு யாரும் முன்வரவில்லை. 50 ஆண்டுகாலம் கட்சிக்காக உழைத்த நபரை ஒதுக்கிவிட்டனர். ஒருவேளை மறைந்த தலைவர் ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் கட்சியின் விசுவாசியான எனக்கு உடனடியாக உதவியிருப்பார்' என மன வருத்தத்துடன் பகிர்ந்துகொண்டார்.

 

Tags :

Share via