டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் 10 விக்கெட் வித்தியாசத்தில் இ ந்தியாவை வீழ்த்தியது பாகிஸ்தான்

by Editor / 25-10-2021 04:04:02pm
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் 10 விக்கெட் வித்தியாசத்தில் இ ந்தியாவை வீழ்த்தியது பாகிஸ்தான்

 


டி20 உலகக் கோப்பை கிரிகெட் போட்டியின்  ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.
துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற 20 ஒவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.


இதன்படி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, கே.எல். ராகுல் களம் இறங்கினர். பாகிஸ்தான் அணி தொடக்கத்தில் இருந்தே பவுலிங்கில் ஆதிக்கம் காட்டியது. அதிலும் ஷகீன் அப்ரிடி ரோஹித் சர்மாவை முதல் ஓவரிலேயே டக் அவுட்டில் வீழ்த்தினார்.

இன்னொரு பக்கம் கே எல் ராகுலும் வெறும் 3 ரன்கள் எடுத்து அவுட்டானார். அதன்பின் களம் இறங்கிய சூர்யா குமார் யாதவும் 11 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். 3வதாக களம் இறங்கிய விராட் கோலி மட்டுமே கொஞ்சம் நிதானமாக ஆடிக்கொண்டு இருந்தார். 18.4 ஓவர் வரை ஆடிக்கொண்டு இருந்த கோலி அதிரடியாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கோலி 49 பந்தில் 57 ரன்கள் எடுத்து இருந்தாலும் கூட தேவைப்பட வேண்டிய நேரத்தில் கோலி அவுட் ஆனார். டவுன் ஆர்டரில் பாண்டியா, ஜடேஜா ஆகியோரும் சரியாக ஆடாமல் வெறியேறினர். 20 ஓவர் முடிவில் இந்தியா 7 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தானின் பவுலிங் சிறப்பாக இருந்தது போலவே பீல்டிங்கும் சிறப்பாகவே இருந்தது. பாகிஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக ஷாஹின் அப்ரிடி 3 விக்கெட்டுகளையும், ஹசன் அலி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.


இதனையடுத்து 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பாபர் அசாமும், ரிஸ்வானும் களமிறங்கினர். துவக்கத்தில் இருந்தே இந்திய அணியின் பந்துவீச்சை எளிதாக எதிர்கொண்ட பாகிஸ்தான் அணி வீரர்கள் மளமளவென ரன் குவிப்பில் ஈடுபட்டனர். வருண் சக்ரவர்த்தி கஷ்டமான பவுலர் என்பதால் அவரின் முதல் ஓவரில் பெரிதாக அடிக்காமல் வெறும் 2 ரன்கள் மட்டுமே பாகிஸ்தான் எடுத்தது. ஆனால் அதன்பின் அவர் வீசிய 13வது ஓவரில் இரண்டு சிக்ஸ் அடித்து அவரையும் பாகிஸ்தான் கலங்க வைத்தது. இந்திய அணியின் கேப்டன் கோலியும் மாறி மாறி வருண், ஜடேஜா, பும்ரா, ஷமி என்று பலரையும் மாறி மாறி பவுலிங் செய்ய வைத்தார்.

ஆனால் யார் பவுலிங் செய்தும் பாகிஸ்தான் ஒப்பனர்கள் விக்கெட்டை எடுக்க முடியவில்லை. இதில் பாகிஸ்தான் ஒப்பனர்கள் பாபர், ரிஸ்வான் இரண்டு பேருமே அரைசதம் அடித்து இந்திய பவுலிங்கை துவம்சம் செய்தனர். பாபர் 68 ரன்கள், ரிஸ்வான் 79 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. இந்த நிலையில் 18வது ஓவரை வீசிய ஷமியின் பந்து வீச்சை களங்கடித்த பாகிஸ்தான் அணி 17.5 ஓவரிலேயே 152 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
உலகக்கோப்பை வரலாற்றில் முதல் முறையாக பாகிஸ்தானிடம் இந்திய அணி வீழ்ந்திருப்பது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

துபாய் மைதானத்தில் இந்தியா பாகிஸ்தான் போட்டியை நேரில் பார்த்துவிட்டு வெளியே வந்த இந்திய ரசிகர்கள் சோக மாயமாய் காட்சி அளித்தனர். உலகமே எதிர்நோக்கும் போட்டியில் குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர்கள் செயல்பாடு குறித்து அவர்கள் அதிருப்தி தெரிவித்தனர். விளையாட்டில் வெற்றியும் தோல்வியும் சகஜம் தான் என்றாலும் இந்திய அணி தோற்றவிதம் ஏமாற்றம் தருவதாக அவர்கள் கூறினர்.

இந்தியாவிலும் நாடு முழுவதும் தொலைக்காட்சியில் ஆட்டத்தை நேரலையில் பார்த்துக்கொண்டிருந்த கோடிக்கணக்கான ரசிகர்கள் இந்திய அணி தோல்வியால் கலையிழந்தனர். மும்பையில் இந்தியா பாகிஸ்தான் ஆட்டத்தை நேரலையில் பார்த்துக்கொண்டிருந்த பாதுகாப்பு படை வீரர்கள் இந்திய அணியின் தோல்வி கண்டு அதிர்ச்சியுற்றனர். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என சகல துறைகளிலும் இந்தியாவை பாகிஸ்தான் வெற்றி கொண்டுவிட்டதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர்.இனியாவது தவறுகளை களைந்து உலக கோப்பையில் அடுத்து வரும் போட்டிகளில் இந்திய அணி வலுவாக மீண்டு வர வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகின்றனர்.

20 ஓவர் உலக கோப்பை போட்டியில் தொடர்ந்து 5 முறையும், 50 ஓவர் உலக கோப்பை போட்டியில் தொடர்ச்சியாக 7 முறையும் பாகிஸ்தான் அணி இந்தியாவிடம் தோல்வி கண்டு இருந்தது. உலக கோப்பை போட்டியில் தங்களுக்கு எதிரான இந்திய அணியின் நீண்ட கால வெற்றியை பாகிஸ்தான் அணி நேற்றைய ஆட்டத்தில் முடிவுக்கு கொண்டு வந்தது.

போட்டி முடிந்ததும் பாகிஸ்தான் தொடக்க வீரர் மொகமட் ரிஸ்வான் மற்றும் பாபர்அசாம் ஆகியோர் இந்திய கேப்டன் விராட் கோலி கட்டிப்பிடித்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

 

Tags :

Share via