ஜீப்பை  திருடிச்  சென்ற  வடமாநில  கொள்ளையர்கள்...

by Editor / 30-10-2021 07:04:53pm
ஜீப்பை  திருடிச்  சென்ற  வடமாநில  கொள்ளையர்கள்...

திருடுபோன போலிரோ ஜீப்பை கொள்ளையர்கள் ஒட்டி சென்றபோது துரத்தி சென்று பிடிக்க முயன்றவர்களை வடமாநில கொள்ளையர்கள் கைத்துப்பாக்கியால் சுட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒசூர் அருகேயுள்ள எஸ்.முதுகானப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராகேஷ் (28) இவர் விவசாயம் செய்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான பொலிரோ ஜீப்பை வீட்டின் முன்பு நிறுத்துவது வழக்கம், அதுபோலவே கடந்த திங்கள்கிழமை ராகேஷ் தனது வீட்டின் முன்பு பொலிரோ ஜீப்பை நிறுத்தியிருந்தார். அப்போது நள்ளிரவில் அவரது வீட்டிற்கு சென்ற மர்மநபர்கள் பொலிரோ ஜீப்பை திருடி சென்றனர்.

இந்த திருட்டு சம்பவம் குறித்து ராகேஷ் சமூகவளைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். தொடர்ந்து ஒசூர் மத்திகிரி காவல்நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். இன்று எஸ்.முதுகானப்பள்ளி கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் கர்நாடகா மாநிலத்திலுள்ள தர்மஸ்தலா கோயிலுக்கு சென்றுள்ளனர்.

அப்போது நெலமங்களா பகுதியில் தும்கூர் சாலையில் ராகேஷின் திருடுபோன பொலிரோ ஜீப் சாலையோரத்தில் நின்றுள்ளது இதனைப்பார்த்த இளைஞர்கள் இதுகுறித்து ராகேஷிற்கு தகவல் அளித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து ராகேஷின் உறவினர்களான நந்தாகிஷோர், ஹரிஸ் உள்ளிட்டோர் பெங்களுருவிலிருந்து நெலமங்களா பகுதிக்கு சென்று பொலிரோ ஜீப்பை தேடியுள்ளனர்.

அப்போது திருடுபோன பொலிரோ ஜீப்பை கொள்ளையர்கள் தும்கூர் சாலையில் ஒட்டி சென்றுள்ளனர். அவர்களை ராகேஷின் உறவினர்களான நந்தாகிஷோர், அரிஸ் ஆகியோர் துரத்தி சென்று பிடிக்க முயன்றுள்ளனர். அப்போது பொலிரோ ஜீப்பில் சென்ற கொள்ளையர்கள் பின்னால் துரத்தி சென்ற நந்தாகிஷோர், ஹரிஸ் ஆகியோரை கைத்துப்பாக்கியால் சுட முயன்றுள்ளனர்.
 
இதனைப்பார்த்து அச்சமடைந்த அவர்கள் அதனை தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளனர். தொடர்ந்து கொள்ளையர்களை விரட்டி சென்றால் உயிருக்கு ஆபத்து என்று உணர்ந்து பின்வாங்கினர்.

அதிவேகமாக சென்ற கொள்ளைர்கள் நெலமங்களா பகுதியில் இருந்த சுங்க சாவடியை இடித்து தள்ளிவிட்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து ராகேஷ் மற்றும் அவரது உறவினர்கள் நந்தாகிஷோர், ஹரிஸ் ஆகியோர் நெலமங்களா காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் திருடிய கொள்ளையர்கள் இந்தி மொழியில் பேசியதால் அவர்கள் வடமாநில கொள்ளையர்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது.  இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via