நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசம்: விவசாயிகள் வேதனை

by Editor / 09-11-2021 03:05:07pm
நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசம்: விவசாயிகள் வேதனை

 

கனமழை மற்றும் அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரால், ஏராளமான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசமடைந்து வருகின்றன.
 
திருச்சி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால், ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மற்றும் வாழை மரங்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

திருச்சியில், உறையூர், லிங்கா நகர், எடமலைபட்டிபுதூர், கிருஷ்ணாபுரம், செல்வா நகர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது. அத்துடன்,

கோப்பு, கொடியாலம், புலிவலம், முள்ளிக் கரும்பூர், பேரூர் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் முழ்கின. இதேபோன்று, வாழை தோட்டங்களிலும் மழை நீர் தேங்கி நிற்பதால், வாழை பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

உய்யகொண்டான் கால்வாயில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக வடிகால் இன்றி நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 2 வாரமாக பெய்து வரும் கனமழையால், குளக்கரைகளில் உடைப்பு ஏற்பட்டதால், செம்பனார்கோவில் அருகே விழி கருவாழக்கரை, மேலையூர், ஆலவேலி, அடைக்கலபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள,  விளை நிலங்களில் வெள்ள நீர் புகுந்தது.  இதில் சுமார் 800 ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த நெற் பயிர்கள் நீரில் மூழ்கின.
 
கால்வாய்கள் முறையாக தூர்வாராததே இதற்கு காரணம் எனக் கூறும் விவசாயிகள், வாய்க்கால்களை தூர்வாரவும், தங்களுக்கு இழப்பீடு வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

இதேபோன்று, புதுச்சேரியின் நெற்களஞ்சியமான பாகூரில் 500 ஏக்கர் நெற்பயிற்கள் நீரில் மூழ்கின. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் புதுச்சேரியில் தொடர்கன மழை பெய்து வருகிறது.

 இதன் காரணமாக விவசாய நிலங்களில் மழை நீர் தேங்கி உள்ளது. குறிப்பாக பாகூர் பகுதியில் தொடர் மழையின் காரணமாக சுமார் 500 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிற்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் வேதனை அடைந்துள்ள விவசாயிகள், தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

Tags :

Share via