திருப்பூரில் விஷவாயு தாக்கியதில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

by Editor / 15-11-2021 04:46:25pm
திருப்பூரில் விஷவாயு தாக்கியதில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி சாயப்பட்டறை உரிமையாளர் தனலட்சுமி மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

திருப்பூர் வீரபாண்டி அருகே கொத்துதோட்டம் பகுதியில் தனியார் சாயப்பட்டறை செயல்பட்டு வருகிறது. இந்த சாயப்பட்டறையின் பின்புறம் 20 அடி ஆழத்தில் கழிவு நீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டறையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியை சேர்ந்த தினேஷ் பாண்டி (வயது 32) என்பவர் மேலாளராக பணியாற்றி வந்தார்.

இந்தநிலையில் நேற்று கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. இப்பணியில் தொழிலாளர்களான கோவை காரமடை பகுதியை சேர்ந்த வடிவேலு (28), நாகராஜ், ராமகிருஷ்ணன் ஆகியோர் ஈடுபட்டனர்.

வடிவேலும், நாகராஜும் கழிவு நீர் தொட்டிக்குள் இறங்கி சுத்தப்படுததும் பணியில் ஈடுபட்டனர். தொட்டிக்கு மேல் பகுதியில் ராமகிருஷ்ணன் நின்று கொண்டிருந்தார்.

அப்போது  கழிவுநீர் தொட்டியில் இருந்து வெளியேறிய விஷவாயுவால்  வடிவேலுக்கும், நாகராஜூ க்கும்  மூச்சுத்திணறல் ஏற்பட்டதுடன் தங்களை காப்பாற்றுமாறு கூச்ச லிட்டனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த ராமகிருஷ்ணன் அருகில் உள்ளவர்களை உதவிக்கு அழைத்தார். அப்போது சாயப்பட்டறை அலுவலகத்தில் இருந்த மேலாளர் தினேஷ்பாண்டி, எலக்ட்ரீசியன் ராஜேந்திரன் ஆகியோர் அங்கு ஓடி வந்தனர்.  
 
தினேஷ்பாண்டி கழிவு நீர் தொட்டிக்குள் இறங்கி நாகராஜை மீட்டு தொட்டியின் மேல் நிற்பவர்களிடம் கொடுத்தார். மேலும் தொட்டிக்குள் மயங்கி கிடந்த வடிவேலுவை மீட்க தொட்டியின் அடிப்பகுதிக்கு தினேஷ் பாண்டி சென்றார்.

அதன்பின்னர் அவர் மேலே வரவில்லை. அவரும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கினார். இதுகுறித்து திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கும், வீரபாண்டி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு துறை வீரர்களும், போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அவர்கள் தொட்டிக்குள் இறங்கி மயங்கி கிடந்த வடிவேல், தினேஷ் பாண்டியை மீட்டு மேலே கொண்டு வந்த போது அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.

இதற்கிடையே நாகராஜ், ராமகிருஷ்ணன், ராஜேந்திரன் ஆகியோர் மயங்கினர். அவர்களை போலீசார் மீட்டு  திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை ராஜேந்திரன் இறந்தார்.

இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி, பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணியில் ஈடுபடுத்துதல், அஜாக்கிரதையாக  இருப்பது, உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தே செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ்  சாயப்பட்டறை உரிமையாளர்  தனலட்சுமி மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இறந்தவர்களின் உடலை அங்கிருந்து எடுத்து செல்ல விடாமல் உறவினர்கள் போலீசார் மற்றும் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது இறந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அப்போது தான் உடலை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் வடிவேலுவின் தந்தையும் நிவாரணம் வழங்க கோரி அந்த நிறுவனம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார். பின்னர் போலீசார் அவர்களை சமாதானம் செய்து இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கடந்த 2019-ம் ஆண்டு திருப்பூர் கருப்பகவுண்டம்பாளையத்தில் இதேபோன்று சாய ஆலை தொட்டியை சுத்தம் செய்ய சென்று, வடமாநிலத்தினர் 4 பேர் இறந்தனர்.

தற்போது மீண்டும் ஏற்பட்ட சம்பவத்தில் 3 பேர் பலியானது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  

 

 

Tags :

Share via