தக்காளி விலை உயர்வு

by Editor / 19-11-2021 05:38:22pm
தக்காளி விலை  உயர்வு

தொடர் மழையின் காரணமாக தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. கிலோ ரூ.75-க்கு விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் பல இடங்களில் உழவர் சந்தைகளும், பல்வேறு பகுதிகளில் வாரச்சந்தைகளும், தினசரி காய்கறி கடைகளும் உள்ளன. இந்த சந்தைகளுக்கு காய்கறிகள், பழங்கள், கீரைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான காய்கறிகள் கொண்டுவந்து வியாபாரிகள், விவசாயிகள் விற்பனை செய்கிறார்கள்.
 
பெரும்பாலான காய்கறிகள் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, பெங்களூரு, நீலகிரி, திருச்சி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படுகின்றன.

இந்தநிலையில் தொடர் மழையின் காரணமாக செடிகளில் பூக்கள் மற்றும் பிஞ்சுகள் தாக்கு பிடிக்க முடியாமல் உதிர்ந்துள்ளன. இதனால் தக்காளி பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.

மேலும், சந்தைகளுக்கு போதுமான அளவு வரத்து இல்லாததால் தக்காளி விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.40 வரை விற்பனையானது.

 அதன்பிறகு படிப்படியாக விலை உயர்ந்து நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.75-க்கு விற்பனை செய்யப்பட்டது. சில கடைகளில் ரூ.90 வரை விற்பனையாகிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், கரூர் மாவட்டத்திற்கு மேச்சேரி, மேட்டூர், காடையாம்பட்டி, ஓமலூர், வாழப்பாடி, ஓசூர், ராயக்கோட்டை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தக்காளி விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

தொடர் மழை காரணமாக செடிகளில் பூக்கள் உதிர்ந்துள்ளன. இதனால் தக்காளி பயிர் சாகுபடி கடுமையாக பாதித்துள்ளது.

இதனால் நாட்டு தக்காளி, ஆப்பிள் தக்காளி சந்தைகளுக்கு குறைந்தளவே வருகிறது. இதனால் தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது என்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo