திருப்பதி கோவிலில்   15 ஊழியர்கள் கொரோனாவால் பலி

by Editor / 30-04-2021 06:39:36pm
திருப்பதி கோவிலில்   15 ஊழியர்கள் கொரோனாவால் பலிதிருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி தலைமையில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க எடுக்க வேண்டிய முனெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்படும் தேவஸ்தான ஊழியர்களுக்கு சிகிச்சை அளிப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுப்பா ரெட்டி, கொரோனா இரண்டாம் அலை வேகமாகப் பரவி வரும் நிலையில் பக்தர்கள் மூலம் தேவஸ்தான ஊழியர்களுக்கு கொரோனா பரவாமல் தடுக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டது.
சித்தூர் மாவட்டத்தில் அதிக அளவில் கொரோனா நோயாளிகள் பாதிக்கப்படுவது கவலை அளிக்கிறது. தேவஸ்தான பணியாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கொரோனா வைரஸ் காரணமாக தேவஸ்தான ஊழியர்கள் பணிபுரியும் 15 பேர் இறந்துள்ளனர் என்பது மிகவும் வேதனையான தகவல்.
தேவஸ்தான பணியாளர்களின் நலனுக்காக போர்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இதுவரை 3,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தேவஸ்தான ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் தேவஸ்தான ஊழியர்களுக்கு என பர்டு மருத்துவமனையில் தேவையான ஏற்பாடுகள் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளோம். ஏழுமலையான் கோயிலில் தரிசனத்திற்காக திருமலைக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.
சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் திருமலையில் மத்திய மாநில அரசு நிபந்தனைகள் கொண்டு வரும் கொரோனா விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். மத்திய மற்றும் மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்ப்படி ஏழுமலையானை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு வாய்ப்பு அளித்து வருகிறோம். சளி, இருமல், காய்ச்சல் உள்ள பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வர வேண்டாம் என அவர் தெரிவித்தார்.

 

Tags :

Share via