வங்கக்கடலில் உருவானது ஜாவத் புயல் நாளை கரையை கடக்கும்
மத்திய மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஜாவத் புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
நேற்று அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக உருமாறியது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. ஜாவத் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல், நாளை காலை வடக்கு ஆந்திர - தெற்கு ஒடிசா கடற்கடை அருகே சென்றடையும் என இந்திய வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
புயல் காரணமாக, இன்று மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதி, மற்றும் வடக்கு ஆந்திரா மற்றும் ஒரிசா கடலோர பகுதிகளில் புயல் காற்று மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என கருதப்படுகிறது.
நாளை மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியான ஆந்திரா மற்றும் ஒரிசா கடலோர பகுதிகளில் புயல் காற்று மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 100 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு அமையத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
5 தேதி மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு வங்கக் கடல் பகுதி, வடக்கு ஆந்திரா மற்றும் ஒரிசா கடலோர பகுதிகளில் புயல் காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Tags :