முதல்நிலைத் தேர்வுக்கான முடிவுகள் வருகிற 2022 ஆண்டு ஜனவரி 15 அன்று அறிவிப்பு -ரயில்வே தகவல்

by Editor / 06-12-2021 06:14:31pm
முதல்நிலைத் தேர்வுக்கான முடிவுகள் வருகிற 2022 ஆண்டு ஜனவரி 15 அன்று அறிவிப்பு -ரயில்வே தகவல்

பணியாளர் தேர்வாணையம் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 35,281 தொழில்நுட்பமில்லா பணியாளர்  பதவிகளுக்கு விண்ணப்பம் கோரியிருந்தது. இதையடுத்து 1,26,30,885  விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்திருந்தனர். உலக அளவில் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்ட பணியாளர் தேர்வு இதுவாகும். மார்ச் 2020 முதல் கொரோனா தொற்று முழு அடைப்பு காரணமாக இந்த விண்ணப்பங்களின் பரிசீலனை தாமதம் ஆனது. 2020 ஆம் ஆண்டில் டிசம்பர் 28 முதல் 2021 ஆம் ஆண்டு ஜூலை 31 வரை இந்தியா முழுவதும் 208 நகரங்களில் 726 மையங்களில் 15 மொழிகளில் 68 நாட்கள் முதல்நிலை தேர்வு இணையதள வாயிலாக நடத்தப்பட்டது. இந்த தேர்வு முடிந்தவுடன் தேர்வு வினாக்களுக்கான விடைகள் வெளியிடப்பட்டன. 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 முதல் 23 வரை வெளியிடப்பட்ட விடைகள் சம்பந்தமாக கருத்துகள் கேட்கப்பட்டன. இதற்காக மொத்தம் 93,263 கருத்துக்கள் விண்ணப்பதாரர்களால் தெரிவிக்கப்பட்டிருந்தது. இவையெல்லாம் பரிசீலிக்கப்பட்டு இந்த முதல்நிலைத் தேர்வுக்கான முடிவுகள் வருகிற 2022 ஆண்டு ஜனவரி 15 அன்று அறிவிக்கப்பட இருக்கிறது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் இரண்டாம் நிலை இணையதள வாயிலான தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இரண்டாம் நிலைத்தேர்வு 2022 ஆண்டு பிப்ரவரி மாதம் 14 முதல் 18 வரை நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் அன்றைய நிலையில் கடைபிடிக்கப்படும் கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை கேற்ப இந்த தேர்வு நடைபெறும். எனவே விண்ணப்பதாரர்கள் தேர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ ரயில்வே பணியாளர் தேர்வாணைய இணையதளங்களை பார்த்து தெரிந்து கொள்ளவும். அதிகாரப்பூர்வமற்ற செய்திகளை  தவிர்க்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

Tags :

Share via