வேதா நிலையம்; மேல்முறையீடு இல்லை - தமிழக அரசு விளக்கம்.

by Editor / 20-12-2021 06:05:23pm
வேதா நிலையம்; மேல்முறையீடு இல்லை - தமிழக அரசு விளக்கம்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா  வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற வேண்டிய அவசியமில்லை என நீதிபதி கிருபாகரன் அமர்வு உத்தரவிட்டிருந்தது.நீதிபதி சேஷசாயி அமர்வும் இதேபோல் உத்தரவிட்டதால் மேல்முறையீடு செய்யவில்லை - உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா  சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம் எனும் வீட்டில் வசித்து வந்தார். இந்த இல்லத்தை நினைவிடமாக மாற்ற 2017 ஆம் ஆண்டு அப்போது முதல்வர்  எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். பின்னர், அந்த இடத்தை தமிழக அரசு கையகப்படுத்தி, அரசுடைமை ஆக்குவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது.

ஆனால், இதனை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் தீபக் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கில் கடந்த நவம்பர்24 ஆம் தேதி தீர்ப்பு வெளியாகியது. அதன்படி, வேதா நிலையத்தை அரசுடைமையாக்கிய சட்டம் செல்லாது எனவும், மூன்று வாரத்தில் வேதா நிலையத்தை தீபா மற்றும் தீபக்கிடம் ஒப்படைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்பின்னர் வேதா நிலையத்தின் சாவியை தங்களிடம் ஒப்படைக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் தீபா, தீபக் மனு அளித்தனர். இதைத்தொடர்ந்து, வேதா நிலையத்தின் சாவி கடந்த 10-ஆம் தேதி தீபா, தீபக்கிடம் ஆட்சியர் விஜயா ராணி ஒப்படைத்தார்.

இந்த விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்னவென்று கேள்வி எழுந்த நிலையில் அதற்கான விளக்கத்தை தமிழக அரசு வழங்கியுள்ளது. அதன்படி,  வேதா நிலையத்தை ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாற்ற வேண்டியதில்லை என்ற நீதிமன்ற உத்தரவுகளை ஏற்றுக்கொண்டதால் மேல்முறையீடு செய்யப்படவில்லை என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via