8 குழந்தைகள் பெற்றும் யாரும் பராமரிக்கவில்லை- 94 வயது மூதாட்டி கோவிலில் பிச்சை எடுக்கும் பரிதாபம்
மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்தவர் அலமேலு (வயது94). இவருக்கு 5 மகன்கள், 3 மகள்கள் என 8 பேர் உள்ளனர்.
மூதாட்டி அலமேலுவுக்கு மீஞ்சூர் பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்பிலான வீடு, கடை உள்ளது. கடந்த 2010-ம் ஆண்டு மூதாட்டி அலமேலுவின் கணவர் உடல் நலக்குறைவால் இறந்து விட்டார்.
இதையடுத்து அவர் சொத்துக்களை விற்று மகன், மகள்களுக்கு பிரித்து கொடுத்தார்.
இதன் பின்னர் மூதாட்டி அலுமேலுவை கவனித்துக்கொள்ள மகன்களோ, மகள்களோ முன்வரவில்லை. சொத்துக்களை எழுதி வாங்கியதும் அவரை வீட்டை விட்டு அடித்து விரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் பராமரிக்க ஆள் இல்லாமலும், உணவு கிடைக்காமலும் அலமேலு மிகவும் கஷ்டப்பட்டார். 8 குழந்தைகளை பெற்றும் அவர் ஆதரவின்றி மீஞ்சூரில் உள்ள கோவிலில் பிச்சை எடுத்து சாப்பிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
மேலும் மூதாட்டி அலமேலுவின் மகன் அவரது கையை உடைத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனையடுத்து மூதாட்டி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் புகார் மனு கொடுத்தார்.
அவர் கலெக்டருக்கு எழுதியுள்ள மனுவில், “எனது சொத்துக்களை அபகரித்து விட்டு என்னை 8 பிள்ளைகளும் வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளனர். மூத்த மகன் ஏழுமலை கடந்த மாதம் அடித்து என்னை வெளியே துரத்தி விட்டார். யாரும் என்னை பார்க்க முன்வரவில்லை. 3 வீடு, ஒரு கடை, ஒரு குடோன் சொந்தமாக இருந்தது.
எனது பிள்ளைகளால் எனக்கு மன நிம்மதி இல்லை. என்னை அடித்த ஏழுமலை, மருமகன், பேரன், மருமகள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது பற்றி தாசில்தார், போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags :