முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் மறைவு

1969-ம் ஆண்டு முதல் கருணாநிதியின் உதவியாளராக சண்முகநாதன் இருந்து வந்தார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நிழல் என கருதப்பட்டவர் சண்முகநாதன். தமிழக காவல்துறையில் சுருக்கெழுத்தராக அவர் பணியாற்றி வந்தார். எதிர்கட்சித் தலைவர்களின் மேடைப் பேச்சுகளை சுருக்கெழுத்தில் குறிப்பெடுத்து, பின் அதனை தட்டச்சு செய்து அரசுக்கு அனுப்புவது தான் சண்முகநாதனின் பணி.
கருணாநிதி தமிழக முதல்வராக பொறுப்பேற்ற போது சண்முகநாதன் அவரது உதவியாளராக நியமிக்கப்பட்டார். 1969-ம் ஆண்டு முதல் கருணாநிதி வாழ்ந்த காலம் வரை அவருக்கு உதவியாளராக சண்முகநாதன் இருந்து வந்தார்.
பேராசிரியர் க.அன்பழகன் மற்றும் என் போன்றோரின் மேடைப் பேச்சுகளை நாங்கள் பேசிய ஒரு வார்த்தை கூட மாறாது, அரசுக்கு உளவுத்துறை மூலம் அனுப்பபட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதை அறிந்த நான், சண்முகநாதனை பற்றி விசாரித்து வைத்தேன். அதற்கு பிறகாக, முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின், அவரை என் உதவியாளராக்கி கொண்டேன் என, கருணாநிதியே சண்முகநாதன் குறித்து பொது மேடை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.
கருணாநிதியின் மறைவிற்கு பிறகு ஓய்வு எடுத்து வந்த சண்முகநாதன், கடந்த சில தினங்களாக தீவிர உடல்நிலை கோளாறால் பாதிக்கப்பட்டார். தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் வயது மூப்பு காரணமாக சிகிச்சை பலன் இன்றி அவர் இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திமுக முக்கிய நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Tags :