ஒரு வாரத்தில் சென்னையில் 203 ஆக்கிரமிப்புகள் அகற்றம்

by Editor / 26-06-2022 01:00:57pm
ஒரு வாரத்தில் சென்னையில் 203 ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பெருநகர சென்னை மாநகராட்சியின் 5 மண்டலங்களுக்குட்பட்ட மாநகராட்சி இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், பொது இடங்களில் கொட்டப்படும் கட்டிடக் கழிவுகளை அகற்றுதல், மழைநீர் வடிகாலில் இணைக்கப்பட்டுள்ள கழிவுநீர் இணைப்புகளை துண்டித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு மண்டலத்திற்கும் மண்டல பறக்கும் படைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.இக்குழுவின் மண்டல செயற்பொறியாளர் தலைமையில் ஒரு உதவி செயற்பொறியாளர், ஒரு உதவி இளநிலை பொறியாளர், ஒரு மின் துறை உதவிப் பொறியாளர், 10 சாலைப் பணியாளர்கள் மற்றும் 5 மலேரியா பணியாளர்கள் என மொத்தம் 18 நபர்கள் உள்ளனர். கட்டிடக்கழிவுகளை அகற்ற 1 பாப்காட் (sb cat) இயந்திரம் ஆக்கிரமிப்புகளை அகற்ற 1 ஜேசிபி (JCB) இயந்திரம் மற்றும் இவற்றை கொண்டு செல்ல 1 லாரி (Lorry) மினி வேன் (Mini Van) வழங்கப்பட்டுள்ளது.இக்குழுவானது வாரத்தில் மூன்று நாட்கள் (திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய கிழமைகளில்) முக்கிய சாலைகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு, மாநகராட்சி இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், பொது இடங்களில் கொட்டப்பட்டுள்ள கட்டிடக் கழிவுகளை அகற்றுதல் மற்றும் மழைநீர் வடிகால் இணைக்கப்பட்டுள்ள கழிவுநீர் இணைப்புகளை அகற்றுதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருவதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் மாநகராட்சி தரப்பில், “மாநகராட்சி அறிவித்துள்ள விதிமுறைகளின்படி, கட்டிடக்கழிவுகளை பொது இடங்களில் கொட்டும் நபர்கள் மற்றும் மழைநீர் வடிகால்களில் கழிவுநீர் இணைப்பை ஏற்படுத்தியுள்ள நபர்கள் ஆகியோர் மீது அபராதமும் இக்குழுவால் விதிக்கப்பட்டு வருகிறது. இக்குழுவினரால் இந்த வாரத்தில் மேற்கொள்ளப்பட்ட ரோந்து பணியில் 15 மண்டலங்களில் 203 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு 58 மெட்ரிக் டன் அளவிலான கட்டிடக் கழிவுகள் அகற்றப்பட்டு உள்ளன. மேலும், மழைநீர் வடிகால்களிலிருந்து 32 கழிவுநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.எனவே மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை மேற்கொண்டுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், பொது இடங்களில் கட்டிடக் கழிவுகள் கொட்டுவதை தவிர்க்க வேண்டும். மேலும், மழைநீர் வடிகால்களில் உள்ள கழிவுநீர் இணைப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். தவறும்பட்சத்தில் மாநகராட்சியின் சார்பில் அமைக்கப்பட்ட அமைக்கப்பட்ட மண்டல பறக்கும் படைக்குழுவினரால் அபராதம் விதிக்கப்படும். எனனே பொதுமக்கள் மாநகராட்சியின் இந்த நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் எனவும் அபராதம் செலுத்துவதை தவிர்த்திடவும்” என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஒரு வாரத்தில் சென்னையில் 203 ஆக்கிரமிப்புகள் அகற்றம்
 

Tags :

Share via