ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் முறிந்து விழுந்த ராட்சத மரம்
அரசு ராயப்பேட்டை மருத்துவமனையில் ராட்சத மரம் முறிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் யாரும் இல்லாததால் நல்வாய்ப்பாக, பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டிருக்கிறது.தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த சில நாட்களில் விட்டுவிட்டு அவ்வப்போது மழை பெய்து வந்தாலும் இரவு நேரங்களில் பலத்த காற்று வீசி வருவதால் தொடர்ந்து மரங்கள் முறிந்து விழும் சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாகவே பரவலாக ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்த நிலையில் ஆபத்தை ஏற்படுத்தும் பழைய மரங்களைக் கண்டறிந்து கிளைகளை வெட்டிட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனை வளாகத்தில் ராட்சத மரம் ஒன்று முறிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனை வளாகத்தில் மேற்கூரையின் மீது மரம் முறிந்து விழுந்த போது, அப்பகுதியில் நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் யாரும் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மாநகரம் முழுவதும் அதிகரித்து வரக்கூடிய மர முறிவை கட்டுப்படுத்த புதிய முயற்சிக்கு நடவடிக்கையை சென்னை மாநகராட்சி மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Tags :