ஹெல்மெட்டால் வெளுத்துக்கட்டிய டெலிவரிபாய்...
சென்னை எம்.ஜி.நகர் பகுதியில் வசித்து வரும் ஜார்ஜ் பீட்டர் என்பவர், கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் எழுத்தராக பணிபுரிந்து வருகிறார்.இவர் நேற்று முன் தினம் பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கியில் போன்லெஸ் சிக்கன் ஆர்டர் செய்துள்ளார்.
இவர் உணவு ஆர்டர் செய்த போது குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே ஆர்டர் செய்த உணவை கொண்டு வருவதற்கு தாமதமாகியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த காவலர், டெலிவரி பாயுடன் செல்போனிலேயே கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அதன்பிறகு உணவை வாங்கிய காவலர் டெலிவரி பாயின் கண்முன்னே குப்பையில் வீசிவிட்டு தகாத வார்த்தையால் பேசியதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் கைகலப்பாகி, டெலிவரி செய்யும் பாய் தான் கையில் வைத்திருந்த ஹெல்மெட்டால் காவலரை கடுமையாக தாக்கியதில் தாடை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து ஜார்ஜ் பீட்டர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக எம்.ஜி.ஆர் நகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் உணவு டெலிவரி செய்தது பட்டதாரியான கார்த்திக் வீரா என்பது தெரியவந்தது.
இதனையடுத்து அவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தான் உணவு டெலிவரி செய்ய சென்ற போது காவலர் ஜார்ஜ் பீட்டர் தன்னை மதுபோதையில் தகாத வார்த்தையால் பேசியதாகவும், இதனால் ஆத்திரமடைந்து தாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் மதுபோதையில் இருந்த காவலர் ஜார்ஜ் பீட்டர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கவுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :