அதிரடி ஆபரேஷன். கஞ்சா வேட்டையில் 816 வழக்குகள்.
தமிழகம் முழுவதும் போதைப்பொருளான கஞ்சாவை தடுக்க ஆபரேஷன் கஞ்சா வேட்டை என்ற தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின்பேரில் காவல்துறையின் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதில், தமிழகம் முழுவதும் டிச.6-ஆம் தேதி முதல் நடத்தப்பட்ட ஆபரேஷன் கஞ்சா வேட்டையில் 6,623 கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் காவல்துறை நடத்திய இந்த சோதனையில் ரூ.23 கோடி மதிப்புள்ள ஹெராயின், ரூ.4.20 கோடி மதிப்புள்ள குட்கா, ரூ.1.80 கோடி மதிப்புள்ள கஞ்சா மற்றும் 40 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
புகையிலை, குட்கா பொருட்கள் கடத்தியதற்காக 5,457 வழக்குகளில் 5,037 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 3 வாரங்களில் கஞ்சா விற்பனை தொடர்பாக 816 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், 871 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 164 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கஞ்சா விற்பனை செய்த மொத்த வியாபாரிகளான பெரிசாமி, சீனிவாசன் ஆகியோர் ஆந்திராவில் கைது செய்யப்பட்டனர். அதிகபட்சமாக தஞ்சையில் 83 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுபோன்று தூத்துக்குடியில் ரூ.23 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டு, 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
தடை செய்யப்பட்ட 816 லாட்டரி வழக்குகளில் 1,091 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ரூ.35.40 லட்சம் மதிப்புள்ள லாட்டரி பறிமுதல் செய்யப்பட்டது. பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே கஞ்சா விற்பனை குறித்த விவரங்களை போலீசாருக்கு பொதுமக்கள் அளிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
Tags :