தமிழக சட்ட பேரவையில் இருந்து விசிக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு.

by Writer / 05-01-2022 12:08:32pm
தமிழக சட்ட பேரவையில் இருந்து விசிக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு.

தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் ஆளுநர் ஆர்.என். ரவி உரையுடன் தொடங்கியுள்ளது. ஆளுநர் உரையைப் புறக்கணித்து இன்று அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். நீட் விலக்கு மசோதாவிற்கு ஆளுநர் அனுமதி அளிக்காததைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இன்று சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

சட்டசபையில் முதல்முறையாக இசைத்தட்டுக்கு பதில் தமிழ்த்தாய் வாழ்த்து நேரடியாக பாடப்பட்டுள்ளது. தமிழக அரசின் இசைக்கல்லூரியை சேர்ந்த பணியாளர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை பாடினார்.

ஆளுநர் உரையை வாசிக்கத் தொடங்கும் போதே அதிமுகவினர் கூச்சலிட்டனர். அம்மா மினி கிளினிக் மூடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநர் உரையைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். வெளி நடப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை நிலவுவதாகவும் குற்றம் சாட்டினார். மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்கப்படவில்லை என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.


சட்டசபைக் கூட்டத்தொடரில் இருந்து திமுக கூட்டணி கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். சிந்தனைச் செல்வன், ஆளூர் ஷாநவாஸ், செய்யூர் பாபு, திருப்போரூர் பாலாஜி ஆகியோர் வெளிநடப்பு செய்தனர். நீட் விலக்கு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காததை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

வெளிநடப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்எல்ஏக்கள் "அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக நிறைவேற்றிய The Undergraduate Medical Degree Courses Bill, 2021 யை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் சட்டசபையை மேதகு ஆளுநர் சிறுமைப்படுத்தியுள்ளார். தமிழ்நாடு அரசையும் அதைத் தேர்ந்தெடுத்த தமிழ்நாட்டு மக்களையும், அரசியலமைப்பு சட்டத்தையும் அவமதிக்கிற ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது உரையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் புறக்கணித்து வெளிநடப்புச் செய்கிறோம் என்று அவர்கள் தெரிவித்தனர்

தமிழக சட்ட பேரவையில் இருந்து விசிக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு.
 

Tags :

Share via