விளையாட்டு வீராங்கனை சாய்னா நேவாலிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் சித்தார்த்.

by Writer / 12-01-2022 12:04:06pm
விளையாட்டு வீராங்கனை சாய்னா நேவாலிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் சித்தார்த்.

பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து சித்தார்த்தின் ட்வீட் மிகப் பெரிய சர்ச்சையான நிலையில், இதற்கு அவர் மன்னிப்பு கோரியுள்ளார்.

பாய்ஸ் திரைப்படத்தில் அறிமுகமானவர் சித்தார்த். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி என்று பல்வேறு மொழி படங்களிலும் நடித்தவர்

மேலும், கடந்த காலங்களிலும் இவர் பல்வேறு சமயங்களில் பாஜகவுக்கு எதிராகப் பல ட்வீட்களை பதிவிட்டுள்ளார். இவர் சமீபத்தில் சர்ச்சையில் சிக்கினார்.

அதாவது, கடந்த வாரம் பிரதமர் மோடி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கப் பஞ்சாப் மாநிலத்திற்குச் சென்றிருந்தார். அப்போது போகும் வழியில் போராடும் விவசாயிகள் அவரது வாகனத்தை மறித்துக் கொண்டதால், மேம்பாலம் ஒன்றில் பிரதமர் மோடி சுமார் 20 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. இதையடுத்து அவர் நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டுத் திரும்பினார். இது பிரதமரின் பாதுகாப்பில் மிகப் பெரிய குறைபாடாகப் பார்க்கப்படுகிறது.

இது குறித்து பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது ட்விட்டரில், ஒரு நாட்டில் பிரதமருக்கே பாதுகாப்பு இல்லை என்றால் அந்த நாட்டை எப்படிப் பாதுகாப்பான நாடு என்று சொல்ல முடியும். என்றும் பிரதமர் மீது தாக்குதல் நடத்தியவர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றும் ட்வீட் செய்திருந்தார். இந்த ட்வீட்டிற்கு பதிலளிக்கும் வகையில் சித்தார்த் பதிவிட்ட ட்வீட் தான் பெரும் சர்ச்சையானது. அது இரட்டை அர்த்தம் வரும்படி இருந்ததாகப் பலரும் குற்றஞ்சாட்டினர்.

இது தொடர்பாக இந்திய மகளிர் ஆணையம் கூட விசாரணை நடத்தப் பரிந்துரை அளித்திருந்தது. மேலும், சித்தார்த்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா கூட தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த விவகாரத்தில் சித்தார்த்துக்கு எதிராக குஷ்பு, ரெய்னா என பல்வேறு பிரபலங்களும் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், இந்த விவகாரத்தில் சித்தார்த் தற்போது மன்னிப்பு கோரியுள்ளார்.

இது தொடர்பாக சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில், 'சில நாட்களுக்கு முன்பு உங்கள் ட்வீட் ஒன்றிற்கு நான் அளித்த மூர்க்கத்தனமான நகைச்சுவைக்காக (rude joke) நான் உங்களிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். நான் பல விஷயங்களில் உங்களுடன் உடன்படாமல் இருக்கலாம். ஆனால் உங்கள் ட்வீட்டைப் படிக்கும் போது எனக்கு ஏற்பட்ட ஏமாற்றம் அல்லது கோபம் கூட எனது தொனியையும் வார்த்தைகளையும் நியாயப்படுத்த முடியாது. என்னால் அதை விடச் சிறப்பாகப் பேச முடியும் என்பதை நான் அறிவேன். எந்தவொரு ஜோக்கையும் விளக்க வேண்டும் என்றால், அது ஒரு நல்ல ஜோக் இல்லை என்ற சொற்றொடர் உள்ளது. எனவே, அந்த ஜோக்கிற்கு என்னை மன்னிக்கவும்.

இருப்பினும், எனது ட்வீட் வார்த்தை விளையாட்டு மற்றும் நகைச்சுவையானது மட்டுமே. அதற்கு அனைத்து தரப்பினரும் கூறும் வகையிலான உள்நோக்கம் எதுவும் கொண்டிருக்கவில்லை என்பதை நான் கூறிக்கொள்கிறேன். நான் எப்போதும் பெண்ணியவாதிகள் பக்கம் இருப்பவன். ஒரு பெண்ணாக உங்களைத் தாக்கும் நோக்கம் நிச்சயமாக எனக்கு இல்லை என்றும் நான் உறுதியளிக்கிறேன். எனவே, இத்துடன் இந்த விஷயத்தை நாம் விட்டுவிடலாம் என நம்புகிறேன். நீங்கள் எனது கடிதத்தை ஏற்றுக்கொள்வீர்கள் என்றும் எதிர்பார்க்கிறேன். நீங்கள் எப்போதும் என் சாம்பியனாக இருப்பீர்கள்' என்று பதிவிட்டுள்ளார்.

விளையாட்டு வீராங்கனை சாய்னா நேவாலிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் சித்தார்த்.
 

Tags :

Share via