நாட்டின் பாதுகாப்புக்கு உறுதுணையாக இருந்த எலி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
கம்போடியாவில் நூற்றுக்கணக்கான கண்ணி வெடிகளை மோப்ப சக்தியால் கண்டுபிடித்து நாட்டின் பாதுகாப்புக்கு உறுதுணையாக இருந்த எலி தற்போது உயிரிழந்தது.
ஒரு எலி நாட்டின் பாதுகாப்புக்கு அரணாக இருக்குமா என்ற சந்தேகம் உங்களுக்கு இருந்தால், அந்த சந்தேகத்தை இத்தோடு நிறுத்துக்கொள்ளுங்கள். ஒரு எலி, ஒரே எலி நாட்டின் பாதுகாப்பு அரணாக இருந்திருக்கிறது. துணிச்சலுக்கான அரசின் விருதையும் பெற்றிருக்கிறது.
இது நடந்தது கம்போடியா நாட்டில். ஆச்சரியமாக இருக்கிறதா. ஆனால் இது உண்மை என்பதை மறந்துவிடவேண்டாம். 'மகவா' (Magawa) என்ற எலி கண்ணி வெடிகளையும்,வெடி பொருட்களையும் தனது மோப்ப சக்தியால் கண்டுபிடித்து பலரது உயிரைக் காப்பாற்றி இருக்கிறது. அந்த எலிதான் தற்போது உயிரிழந்திருக்கிறது.
தாண்சானியா நாட்டில் பிறந்த ஆப்ரிக்க வகை எலி தான் மகவா. இந்த எலிக்கு மோப்ப சக்தி இருந்திருக்கிறது. மேலும், மோப்ப சக்தியை அதிகரிக்கவும் இந்த எலிக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அதோடு, கண்ணிவெடிகளை கண்டுபிடிக்கவும் பயிற்சி அளிக்கப்பட்டு, கம்போடியா நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.
பெல்ஜியத்தை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் APOPO. இந்த நிறுவனம் ஆப்பிரிக்க ராட்சத எலிகளுக்கு மோப்ப சக்தியைக் கண்டறியும் பயிற்சியை வழங்கியது. அதில் தேர்ச்சி பெற்ற எலிகளை ஹீரோ ரேட்ஸ் என அழைத்தது.
சுரங்கங்களை மோப்பம் பிடிக்க எலிகளைப் பயன்படுத்துவதால், ஆயுதங்களைக் களைந்து, ஆயுதங்களை அகற்ற வேண்டும். சமயத்தில் இதனால் மனித உயிரிழப்புகள் நடக்கிறது. இதைக் குறைக்க எலிகளுக்கு மோப்ப சக்தி பயிற்சி கொடுக்கப்பட்டு கண்ணி வெடிகள் இருக்கிறதா என சோதிப்போம்.
எலிகள் கண்ணி வெடிகள் மற்றும் வெடிபொருட்களை மோப்பம் பிடித்து சொல்வதால், மனித உயிர்கள் பலியாவதை தவிர்க்க முடிகிறது. இந்த ஹீரோ ரேட் மகவா, இதுவரை 71 கண்ணிவெடிகளையும், 38 வெடிப்பொருட்களையும் தனது மோப்ப சக்தியால் கண்டறிந்திருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
எட்டு வயதான மகவா, தன்னுடைய ஐந்து ஆண்டு காலத்தில் பல வெடி பொருட்களை மோப்ப சக்தியால் கண்டறிந்ததால், துணிச்சலுக்கான உயரிய விருதை மகவா பெற்றது. இந்த விருதினை இங்கிலாந்தின் PDSA என்ற நிறுவனம் மகவாவுக்கு வழங்கியது. கடந்த ஜூன் மாதம் மகவா ஓய்வு பெற்றது.
மகவா நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தது. கடந்த வாரத்தின் பெரும்பகுதியை வழக்கமான உற்சாகத்துடன் விளையாடியது. ஆனால் வார இறுதியில் மகவா எந்த உணவையும் எடுக்காமல் சோர்வாகக் காணப்பட்டது. சரியாகும் என்று நினைத்திருந்தோம். ஆனால் மகவா உயிரிழந்துவிட்டதாக பயிற்சி நிறுவனம் தெரிவித்ததுள்ளது.
நாங்கள் மகவாவின் இழப்பை உணர்கிறோம். மகவாவின் நம்பமுடியாத பணிக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். எங்களது இதயப்பூர்வமான அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறோம் என APOPO நிறுவன ஊழியர்கள் அஞ்சலி தெரிவித்துள்ளனர். மக்களைக் காத்த ஒரு ஹீரோ ஓய்வெடுக்கிறது என APOPO நிறுவனம் மகவா குறித்து தெரிவித்துள்ளது.
Tags :