முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்

by Writer / 12-01-2022 01:15:01pm
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்

தமிழகத்தில் முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. இவர் பலருக்கும் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் அவர் தாக்கல் செய்த முன் ஜாமின் மனுவை, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.

இதனால் தலைமறைவான ராஜேந்திர பாலாஜி, தன் மீதான வழக்கில் முன் ஜாமின் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

இதற்கிடையே கர்நாடகாவில் அவர் கைது செய்யப்பட்டார்.இந்நிலையில் ராஜேந்திர பாலாஜியின் முன் ஜாமின் மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, வழக்கு தொடர்பான கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய அவகாசம் அளிக்கும்படி கோரினார். 


இதையடுத்து ராஜேந்திர பாலாஜிக்கு இடைக்கால ஜாமின் அளித்து, கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய ஒரு மாதம் அவகாசம் அளிக்க நீதிபதிகள் முடிவு செய்தனர். ''இது, போன்ற உத்தரவு எதையும் பிறப்பிக்க வேண்டாம்,'' என கோரிய முகுல் ரோஹத்கி, ராஜேந்திர பாலாஜி மீது 32 வழக்குகள் உள்ளதாக தெரிவித்தார்.இதை கேட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை நாளைய தினத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தனர்.

 

Tags :

Share via