சபாநாயகர் அப்பாவு மீதான நில அபகரிப்பு வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..

by Editor / 28-01-2022 11:03:22pm
சபாநாயகர் அப்பாவு மீதான நில அபகரிப்பு வழக்கு:  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..

சபாநாயகர் அப்பாவு ரூ.80 லட்சம் மதிப்புள்ள தனது நிலத்தை முறைகேடாக அபகரித்துவிட்டதாக நெல்லையை சேர்ந்த  தாமோதரன் தொடர்ந்த வழக்கில் நெல்லை நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் குற்றபத்திரிகை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிடும்படி வழக்கறிஞர் தாமோதரன்  மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு செய்திருந்தார்.

இதற்கிடையில் இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கும்படி சபாநாயகர் அப்பாவு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர் தாமோதரன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் செல்வம் இந்த வழக்கின் குற்றவாளியான அப்பாவு தற்போது ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினராக உள்ளதால் இந்த நில அபகரிப்பு வழக்கை எம்எல்ஏ, எம்.பிக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம்தான் விசாரிக்க முடியும் என வாதிட்டதை தொடர்ந்து இவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்திலுள்ள எம்எல்ஏ,எம்பிக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் சபாநாயகர் அப்பாவு மீதான நில அபகரிப்பு வழக்கு நீதியரசர் நிர்மல்குமார் முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது புகார்தாரர் தாமோதரனின் வழக்கறிஞர் செல்வம் வழக்கின் குற்றவாளியான அப்பாவு தற்போது ராதாபுரம் தொகுதி எம்எல்ஏ மட்டுமன்றி தமிழக சட்டபேரவையின் சபாநாயகராகவும் உள்ளதாக தெரிவித்தார்.

இதை தொடர்ந்து நீதியரசர் நிர்மல்குமார்  இவ் வழக்கு தொடர்பாக இரு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி நெல்லை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரு வாரங்களுக்கு ஒத்தி வைத்தார்.

 

Tags :

Share via