திமுக எம்.பிக்களை புகழ்ந்து பேசிய அதிமுக எம்பியின் பதவி பறிப்பு

அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினராக இருப்பவர் நவநீதகிருஷ்ணன் எம்.பி. இவர் அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவு செயலாளராகவும் பணியாற்றி வருகிறார்.
இதற்கிடையில், திமுக எம்.பி.யும் அக்கட்சியின் செய்தித்தொடர்பு செயலாளருமான இளக்கோவனின் மகள் திருமணம் நேற்று அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. தமிழ்நாடு முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் இந்த திருமணத்தை நடத்தி வைத்தார்.
திமுக தலைமையிடமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற அந்த திருமண நிகழ்ச்சியில் அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியின் போது பேசிய நவநீதகிருஷ்ணன், மாநிலங்களவைக்கு நான் சென்றபோது எனக்க்கு பல விஷயங்கள் தெரியாது. அப்போது, டிகேஎஸ் இளங்கோவன், கனிமொழி (திமுக எம்.பி.க்கள்) உள்ளிட்டோர் எனக்கு நிறைய விஷயங்களை கற்றுக்கொடுத்தனர்’ என்றார்.
திமுக தலைமையிடத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் இவ்வாறு பேசிய நிகழ்வு தமிழ்நாடு அரசியலில் பெரும் பேசுபொருளானது.
இந்நிலையில், அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பொறுப்பில் இருந்து நவநீதகிருஷ்ணன் நீக்கப்படுவதாக அதிமுக தலைமை இன்று அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பொறுப்பில் இருக்கும் நவநீதகிருஷ்ணன் எம்.பி. இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :