ரயில்வே பணிகளில் சேர விரும்புபவர்கள் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம்
ரயில்வே பணிகளில் சேர விரும்புபவர்கள் அதிகாரப்பூர்வமற்ற விளம்பரங்கள் மற்றும் இடைத்தரகர்களை நம்பி அதிக அளவில் பணம் கொடுத்து ஏமாந்து போவதாக செய்திகள் ரயில்வே நிர்வாகத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. ரயில்வே பணிகளில் சேர அதிகாரப்பூர்வ ரயில்வே பணியாளர் தேர்வாணையம் (RRB) மற்றும் ரயில்வே பணியாளர் தேர்வு முகமை (RRC) ஆகியவற்றின் வாயிலாக மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். நாட்டிலுள்ள 21 ரயில்வே பணியாளர் தேர்வாணையங்கள் மற்றும் 16 ரயில்வே பணியாளர் தேர்வு முகமைகள் வாயிலாக மட்டுமே தேர்வு பெற்று ரயில்வே பணிகளுக்கு அமர்த்தப்படுகிறார்கள். இவை தவிர வேறு எந்த நிறுவனமும் ரயில்வே பணிக்கு ஆட்களை தேர்வு செய்வதில்லை. ரயில்வேத்துறைக்கு பணியாளர்களை தேர்வு செய்ய ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அறிவிப்புகள் விளம்பரங்களாக வெளியிடப்படுகின்றன. எம்பிளாய்மெண்ட் நியூஸ்/ ரோஜ்கார் சமாச்சார் போன்ற அரசு வெளியீடுகளில் முழு வேலைவாய்ப்பு விளம்பரங்களும் மற்றும் பிரபல தேசிய மற்றும் உள்ளூர் நாளிதழ்களில் சிறு விளம்பர குறிப்புகளும் வெளியிடப்படுகிறது. மேலும் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்புகள் ரயில்வே தேர்வாணைய இணையதளங்களிலும் வெளியிடப்படுகின்றன. விளம்பரங்களில் அதிகாரப்பூர்வ தேர்வாணைய இணைய தள முகவரிகளும் வெளியிடப்படுகின்றன. சமூக ஊடகங்களில் வெளியாகும் ரயில்வே வேலைவாய்ப்பு செய்திகளை ரயில்வே தேர்வாணைய இணையதளங்கள் மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம். ரயில்வே பணியாளர் தேர்வுக்கு, ரயில்வே தேர்வாணையங்கள் தனி முகவர்களையோ அல்லது பயிற்சி நிலையங்களையோ அனுமதிப்பதில்லை. ரயில்வே வேலைவாய்ப்பு செய்திகளுக்கு அதிகாரப்பூர்வ ரயில்வே தேர்வாணைய இணையதளங்களை பார்க்கலாம். நாட்டில் உள்ள தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வ தேர்வாணைய இணையதளம் வாயிலாக அனுப்பலாம். ரயில்வே போட்டித் தேர்வுகள் முழுமையாக கணினி மயமாக்கப்பட்டுள்ளது. தகுதி அடிப்படையிலேயே விண்ணப்பதாரர்கள் பணியாளர்களாக தேர்வு செய்யப்படுகின்றனர். எனவே ரயில்வே பணியில் சேர விரும்புபவர்கள் இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். விண்ணப்பதாரர்கள் ரயில்வே பணிக்கு குறுக்கு வழிகளை நாடினால் தகுதி நீக்கம் செய்யப்படுவது மட்டுமல்லாமல் சட்டபூர்வ நடவடிக்கைக்கும் ஆளாக நேரிடும். யாராவது பணம் கேட்டு ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக விண்ணப்பதாரர்களை தொடர்பு கொண்டால் உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கவும். தொலைபேசி எண் 044 23213185 ஐ தொடர்பு கொண்டு விளக்கங்கள் மற்றும் வழிகாட்டுதல்களை பெறலாம். ரயில்வே பணிகளில் சேர விரும்புபவர்கள் ரயில்வேயின் குறிக்கோளான அதிகாரப்பூர்வமான தேர்வாணையங்கள் வாயிலாக நடத்தப்படும் நேர்மையான, வெளிப்படையான பணியாளர் தேர்வு முறைக்கு ஒத்துழைப்பு நல்கும் படி வேண்டப்படுகிறார்கள்.
Tags : Those who want to join the railway work should not be deceived by relying on intermediaries