சென்னை எழும்பூரில் போலீஸ் அருங்காட்சியகம் : முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை, எழும்பூரில் உள்ள பாரம்பரியம் மிக்க பழைய காவல் ஆணையரக கட்டடம் 6 கோடியே 47 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு காவல் அருங்காட்சியகமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பார்வைக்காக அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை மாவட்டம், எழும்பூரில் பாரம்பரியம் மிக்க பழைய காவல் ஆணையரக கட்டடமானது, தமிழ்நாடு காவல் அருங்காட்சியகமாக 24,000 சதுர அடி பரப்பளவில் இரண்டு தளங்களாக அமைக்கப்பட்டுள்ளது. இக்கட்டடத்தின் தரைதளத்தில் காவல் துறையில் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள், சீருடைகள், வாத்திய இசைக் கருவிகள், காவல் துறையின் சாதனைகள், காவல் துறையால் மீட்டெடுக்கப்பட்ட சிலைகள், கள்ள நோட்டு அச்சடிக்கும் இயந்திரம், வெடிகுண்டுகள், குண்டுகளை கண்டெடுக்க உதவும் கருவிகள், மாதிரி சிறைச்சாலை ஆகியவையும், முதல் தளத்தில், அன்று முதல் இன்றுவரை பயன்படுத்தப்பட்டு மற்றும் பயன்படுத்தி வரும் துப்பாக்கிகள், வாள்கள், தோட்டாக்கள் ஆகியவையும் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
மேலும், காவல் துறையில் சிறப்பாக பணி செய்த காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை வழங்கப்பட்டு வரும் மாதிரி பதக்கங்களும் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்த அருங்காட்சியகத்தில் முக்கிய வரலாற்று ஆவணங்கள், காவல்துறை தொடர்பான அக்காலத்தில் இயற்றப்பட்ட அதிமுக்கிய அறிவிப்புகள், ஆங்கிலேயக் காலத்து காவல்துறையினர் பயன்படுத்திய ஆயுதங்கள், தமிழக காவல்துறையின் தொடக்கக் கால சீருடைகள், பெல்ட், மோப்ப நாய்படைகளின் புகைப்படங்கள், வரலாற்றுச் சிறப்பு மிக்க செய்தித்தொகுப்புகள், காவல் ஆணையாளர் அலுவலக அறையில் உள்ள அரிய பழம்பொருட்கள், அணிவகுப்பு சின்னங்கள், கம்பியில்லா தொலைத்தொடர்பு கருவிகள், காவல்துறை சேவை பதக்கங்கள், கலைப்பொருட்கள் ஆகியவையும் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.
இக்காவல் அருங்காட்சியகத்தில், கூடுதல் வசதிகளாக கண்காணிப்பு கேமரா, தீ தடுப்பு சாதனங்கள், குடிநீர் வசதி, மழை நீர் சேகரிப்பு வசதி, சிற்றுண்டியகம், நுழைவுச் சீட்டு வழங்கும் இடம் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.இந்நிகழ்வில், தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தை பார்வையிட வந்த பள்ளி மாணவ, மாணவியர்களிடம் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துரையாடி, இனிப்புகளை வழங்கினார்.
மேலும், அக்டோபர் 1-ஆம் தேதி முதல் அருங்காட்சியகத்தை பார்வையிட வரும் அரசுப் பள்ளி மாணாக்கர்களுக்கு அனுமதி கட்டணம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :



















