சென்னையில் இருந்து திருப்பதிக்கு 52 பஸ்கள் இயக்கம்

by Admin / 16-02-2022 04:08:18pm
சென்னையில் இருந்து திருப்பதிக்கு 52 பஸ்கள் இயக்கம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா தொற்று பரவல் காரணமாக ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட்டில் குறைந்த அளவு பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

தொற்று பரவல் குறைந்ததையடுத்து தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டது. தற்போது ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட்டில் தினமும் 10 ஆயிரம் பக்தர்களும், ஆன்லைன் இலவச தரிசன டிக்கெட்டில் 10 ஆயிரம் பக்தர்கள் மற்றும் கல்யாண உற்சவம் ஸ்ரீவாணி அரக்கட்டளை உள்ளிட்டவைகளின் மூலம் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று தினமும் 15 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் நேற்று முதல் நேரடி இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கி வருகின்றனர்.

நேற்று நேரடி இலவச தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் இன்று வாகனங்கள் மூலமாகவும், நடை பாதையாகவும் திருமலைக்கு சென்று அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் தரிசனம் செய்து வருகின்றனர்.

ஏற்கனவே ஆன்லைனில் 10ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. தற்போது கூடுதலாக 5 ஆயிரம் நேரடி இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கி வருகின்றனர். திருப்பதியில் மற்ற மாநில பக்தர்களை விட தமிழகத்தில் தான் அதிக அளவில் தரிசனம் செய்து வருகின்றனர்.

எனவே தமிழக பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக திருப்பதியிலிருந்து வேலூருக்கு 34 ஆந்திர மாநில பஸ்கள் இயக்கப்படுகிறது. 15 நிமிடத்திற்கு ஒரு பஸ் என 68 முறை இயக்கப்படுகிறது.

இதேபோல் வேலூர் பஸ் நிலையத்தில் இருந்தும் திருப்பதிக்கு 24 மணி நேரமும் பஸ் போக்குவரத்து நேற்று முதல் தொடங்கியது.

இதேபோல் சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் பக்தர்களின் வசதிக்காக சென்னை மாதவரம் பஸ் நிலையத்தில் இருந்து 52 ஆந்திர மாநில பஸ்கள் இயக்கப்படுகிறது.

திருப்பதியில் நேற்று 31,794 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 16,731 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.2.58 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

 

Tags :

Share via