ஹெலிகாப்டர் மூலம் மீட்டெடுத்த ராணுவ வீரர்கள்

by Admin / 21-02-2022 11:39:10am
 ஹெலிகாப்டர் மூலம் மீட்டெடுத்த ராணுவ வீரர்கள்

பெங்களூரு அருகே சிக்பள்ளாப்பூரை அடுத்த நந்தி கிராமத்தில் நந்திமலை அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான இவ்விடத்திற்கு வார இறுதியில் பல்வேறு பகுதிகளில்  இருந்து ஏராளமானோர் குவிவார்கள் என சொல்லப்படுகிறது. 

குறிப்பாக பெங்களூருவில் ஐ.டி. நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் வார இறுதி நாட்களை இங்கு தான் கழித்து வருகிறார்கள். 

இந்த நிலையில் விடுமுறை தினமான நேற்று பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டியில் வசித்து வரும் கொல்கத்தாவை சேர்ந்த 19 வயதான நிஷாந்த்  என்ற வாலிபர் தனது உறவினர்கள் சிலருடன் நந்திமலைக்கு சென்றுள்ளார். 

இந்நிலையில் நந்திமலை அடிவாரத்தில் இருந்து வனப்பகுதி வழியாக மலையின் உச்சிக்கு நிஷாந்த் தனது உறவினர்களோடு மலையேற்றம் சென்றுள்ளார். 

அவ்வப்போது சுமார் 300 அடி உயரத்தில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாரத விதமாக மலையில் இருந்து நிஷாந்த் தவறி விழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது.  

இதனை கண்டு அதிர்ச்சியடைந்து உறவினர்கள் கதறியதாக கூறுகின்றனர்.இதன் பின்னதாக இவரின் நிலைமை குறித்து எதுவும் தெரியப்படாத நிலையில், அவரது செல்போனில் இருந்து உடன் சென்ற உறவினருக்கு அழைப்பு வந்துள்ளது. 

அதில் பேசிய நிஷாந்த் தான் ஒரு மரத்தில் சிக்கியுள்ளதாகவும் தன்னை உடனடியாக எப்படியாவது மீட்டெடுங்கள் எனவும் கூறியுள்ளார். இதுகுறித்து சிக்பள்ளாப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு நிஷாந்தின் உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
 
இதனையடுத்து  தகவல் அறிந்து சம்பவ இடத்தை நோக்கி விரைந்த தீயணைப்பு படையினர், நந்திமலை போலீசார் 300 அடி பள்ளத்தில் தவறி விழுந்த நிஷாந்தை மீட்க நடவடிக்கை எடுத்தனர். ஆனால் தீயணைப்பு படையினரால் நிஷாந்தை மீட்க முடியவில்லை. 

இந்த நிலையில் நிஷாந்தை மீட்க கர்நாடக அரசு அல்லது மத்திய அரசு ஹெலிகாப்டர் அனுப்பி உதவ வேண்டும் என்று உறவினர்கள் செல்போனில் வீடியோ மூலம் பேசி கோரிக்கை விடுத்து இருந்தனர்.

இதனை தொடர்ந்து சிக்பள்ளாப்பூர் மாவட்ட கலெக்டர் லதா, மாநில அரசை தொடர்பு கொண்டு பேசி நிஷாந்தை மீட்க ஹெலிகாப்டரை அனுப்பி வைக்கும்படி கேட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதையடுத்து இந்திய ராணுவ பயிற்சி மையத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டரை கர்நாடக அரசு, நந்திமலைக்கு அனுப்பி வைத்து இருந்தது.

அந்த ஹெலிகாப்டரில் சென்ற ராணுவ வீரர்கள், பள்ளத்தில் தவறி விழுந்த நிஷாந்தை தேடியுள்ளனர். நீண்ட நேரத்தின் தேடுதலுக்கு பின்னதாக மரத்தில் சிக்கியிருந்த அவரை ராணுவ வீரர்கள் பத்திரமாக மீட்டனர். 

பின்னர் அவரை ஹெலிகாப்டரில் அழைத்து வந்து எலகங்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் ராணுவ வீரர்கள் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

நிஷாந்தை பத்திரமாக மீட்ட ராணுவ வீரர்களுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரளாவிலும் இதுபோன்ற சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via