4 ஆயிரம் தமிழக மாணவர்களின்நிலை கேள்விக்குறியாக உள்ளது.

by Admin / 24-02-2022 04:50:56pm
 4 ஆயிரம் தமிழக மாணவர்களின்நிலை கேள்விக்குறியாக உள்ளது.

போர் தொடங்குவதற்கு முன்னதாகவே இந்திய மாணவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தூதரகம் மூலம் எடுக்கத் தொடங்கியது.ஆனால் குறைந்த அளவிலான மாணவர்கள் மட்டுமே தாயகம் திரும்பி இருக்கிறார்கள். உக்ரைனில் சுமார் 18 ஆயிரம் முதல் 20 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

மருத்துவம், ஏரோநேடிக் என்ஜினியரிங் போன்ற படிப்புகளை அங்குள்ள பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படித்து வருகிறார்கள். விடுதிகளிலும், தனியாக வீடுகள் வாடகைக்கு எடுத்தும் மாணவர்கள் உயர்கல்வி பயின்று வருகிறார்கள்.

இந்தியாவிலேயே கேரள மாணவர்கள் அதிக அளவு அங்கு படித்து வருகிறார்கள். தமிழகத்தில் இருந்து சுமார் 4 ஆயிரம் பேர் படித்து வருவதாக தகவல்கள் தெரிய வருகிறது.

ரஷியா -உக்ரைன் இடையே போர் பதற்றம் ஏற்பட்டவுடன் தமிழக மாணவர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை தூதரகங்கள் மேற்கொண்டபோதிலும், விமான கட்டணம் அதிகரித்ததால் அம்மாணவர்களால் தங்களது சொந்த நாட்டுக்கு திரும்ப முடியவில்லை.

உக்ரைனில் விமானம் கட்டணம் வழக்கத்தைவிட பல மடங்கு அதிகரித்துள்ளது. உக்ரைனில் இருந்து தமிழகத்திற்கு வருவதற்கு ரூ.25 ஆயிரம் கட்டணம் இருந்த நிலையில், தற்போது ரூ.75 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது.

இதனால் பெரும்பாலான மாணவர்கள் பாதுகாப்பாக உக்ரைனிலேயே இருப்பதற்கு முடிவு செய்துள்ளனர். பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் இந்திய மாணவர்கள் பெரும்பாலானவர்கள் உக்ரைனில் தொடர்ந்து இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் உக்ரைன் மீது ரஷியா தாக்குதலை தொடங்கியுள்ளதால் பதட்டம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் கதி என்ன என்பது குறித்து பெற்றோர்கள் கவலை அடைந்துள்ளனர்.

அவர்கள் தங்களது பிள்ளைகளுடன் செல்போன் மூலமாக தொடர்ந்து பேசி அங்குள்ள நிலவரங்களை கேட்டு வருகிறார்கள்.மாணவர்கள் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக பெற்றோர்களிடம் தெரிவித்தாலும், அவர்கள் தமிழக அரசின் மூலமாக மீட்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

உக்ரைனில் கீவ், கார்கீவ் ஆகிய நகரங்களில் தமிழக மாணவர்கள் அதிகளவு தங்கி படித்து வருகிறார்கள். அங்குள்ள இந்திய தூதரகம் மூலமாக மாணவர்கள் பற்றி விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது.மேலும் உக்ரைனில் உள்ள தமிழர்களை மீட்க அயலக தமிழர் நலன் மற்றும் நல்வாழ்வுத்துறை ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

044-28515288, 96000 23645, 99402 56444 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. மேலும் https://nrtamils.tn.gov.in/en/ என்ற இணையதளம் வழியாகவும் உதவி கோரலாம் என்று இந்த ஆணையம் தெரிவித்துள்ளது.

உக்ரைனில் படிக்கும் மாணவர்களை மீட்பது குறித்த நடவடிக்கைகள் தொடங்கியுள்ளது. தமிழக மாணவர்கள் பற்றிய விவரங்கள் முதல்-அமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவர் இந்திய வெளியுறவுத் துறை வழியாக தமிழக மாணவர்களை மீட்கும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

உதவிபெற விரும்பும் தமிழக மாணவர்கள் மேற்கண்ட தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். தற்போது விமான போக்குவரத்து இல்லை என்றாலும், சிறப்பு விமானங்கள் மூலமாக மாணவர்களை பாதுகாப்பாக அழைத்துவர ஏற்பாடு செய்யப்படுகிறது.

உதவி எண்கள் மூலமாக நூற்றுக்கணக்கான மாணவர்கள் தற்போது தொடர்பு கொண்டு வருகிறார்கள். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த சிவலபுரை கிராமத்தை சேர்ந்த மாணவி ஒருவர் உக்ரைனில் 3-ம் ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வருகிறார்.

அவர் டிக்கெட் எடுத்து புறப்படுவதற்கு தயாராக இருந்த நிலையில் விமானம் ரத்து செய்யப்பட்டது. எனவே அனைத்து தமிழக மாணவர்களையும் பாதுகாப்பாக அழைத்துவர தேவையான முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

 

Tags :

Share via