உக்ரைனில் குண்டு காயம் அடைந்த மாணவர் வேண்டுகோள்

by Admin / 04-03-2022 03:13:32pm
உக்ரைனில் குண்டு காயம் அடைந்த மாணவர் வேண்டுகோள்

உக்ரைன் மீதான ரஷிய தாக்குதல் நீடித்து வரும் நிலையில், போர் பகுதிகளில் உள்ள இந்திய மாணவர்கள் வெளியேறி பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு இந்திய தூதரகம் வலியுறுத்தி இருந்தது. 

கடந்த சில நாட்களில் 17,000 இந்தியர்கள் உக்ரைனின் எல்லைகளை விட்டு வெளியேறியுள்ளனர் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. 

மேலும் உக்ரைன் தலைநகரில் இருந்து இந்தியர்கள் அனைவரும் வெளியேறி விட்டதாக தூதரக தகவல்கள் தெரிவித்திருந்தன.

இந்நிலையில் கீவ்வில் ஒரு இந்திய மாணவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக விமானப் போக்குவரத்துத் துறை இணை மந்திரி வி கே சிங் தெரிவித்திருந்தார். 

தற்போது அந்த மாணவர் குறித்த விபரம் வெளியாகி உள்ளது.  டெல்லி அருகே உள்ள சத்தர்பூரை சேர்ந்த ஹர்ஜோத் சிங் என்ற அந்த மாணவர் கீவ் நகரில் தங்கி படித்து வந்துள்ளார்.

தனது நண்பர்களுடன் கீவ் பகுதியில் இருந்து லிவிவ் நகருக்கு ஒரு காரில் சென்ற போது அவர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. காயமடைந்த நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சிகிச்சை பெற்று வரும் நிலையில்,தனியார் தொலைக்காட்சிக்கு அவர் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:

எனது தோளில் தோட்டா நுழைந்தது. அவர்கள் (மருத்துவர்கள் ) என் மார்பில் இருந்து ஒரு தோட்டாவை வெளியே எடுத்தனர்.என் கால் முறிந்தது. 

நான் தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்டு, என்னை லிவிவ் நகருக்கு அழைத்துச் செல்வதற்கான வசதியை வழங்க முடியுமா என்று கேட்டேன். 

என்னால் நடக்க முடியாது. நான் அதிகாரிகளுக்கு போன் செய்து கொண்டே இருந்தேன்.ஆனால் யாரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை. 

இன்னும் பல இந்திய மாணவர்கள்  கீவ்வில் சிக்கியுள்ளனர். தூதரகம் கீவ்வில் உள்ள மாணவர்களுக்கு உதவ வேண்டும்.

என்ன நடந்தாலும் எதுவும் செய்ய முடியாது என்பதுதான் என்னுடைய ஒரே செய்தி. நல்லதை மட்டுமே நம்புவோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே காயமடைந்த இந்திய மாணவரை தொடர்பு கொண்ட இந்திய அதிகாரிகள் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


 

 

Tags :

Share via